பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நினைவு அலைகள் அதற்காகச் சீசன் பயணச் சீட்டு பெற்றிருந்தார்கள். மூவரும் எனக்கு நண்பர்கள். பசவலிங்கப்பா என்பவர் என்னுடன் படித்த நண்பர், கிருஷ்ணசாமி என்னும் ஒருவரும் அப்படியே. என்னுடன் படித்த தங்கவேலு, கதிர்வேலு இருவரும் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். திருநாவுக்கரசு, வாசுதேவன், வரதராஜூலு என்பவர்களும் எனக்குத் தோழர்கள். வி.கே. இராஜகோபாலன் உயர்நிலை வகுப்புகளிலே என்னுடன் படித்த அன்பர். இன்றுவரை நெருக்கமாகவும் அதே நேரத்தில் எட்டியும் இருக்கும் நண்பர். இராமசாமி, சுப்பாராவ், வி.கே. இராஜகோபாலன் ஆகிய மூவரும் பார்ப்பனர்கள். இவர்களுடைய குடும்பச் சூழல் கல்வி மனங்கொண்டது. மோசசும் பாலும் கிறுத்துவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. இவர்கள் வீடுகளிலும் கல்வி ஒளி உண்டு. சத்தாரும் வகாப்பும் இஸ்லாமியர்கள் என்பது பெயர்களிலேயே வெளிச்சம். பசவலிங்கப்பா, வீரசைவர்; இலிங்கம் கட்டி. கிருஷ்ணசாமி கருணிகர். தங்கவேலு குலாலர். கதிர்வேலு பொற்கொல்லர். பார்த்தசாரதி, வாசுதேவன், திருநாவுக்கரசு ஆகிய மூவரும் நாட்டு வழக்குப்படி வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முதலியார்கள். பல பிரிவினர்களோடு நட்போடு பழக நேர்ந்தது. என் சாதி நெடியைப் பெருமளவு மாற்றிவிட்டது. * இராமசாமியும் சுப்பாராவும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் குடியிருந்தார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, வழியில் குடியிருந்த என்னையும் அழைத்துக் கொண்டு போவார்கள். வாசுதேவனும் பல நாள் என்னோடு வருவார். முன்னிருவரோடு படிப்பில் போட்டி போட்டு வந்தேன். என்னை மிஞ்சிவிடுவார்களோ என்று நான் அஞ்சும் அளவிற்கு வாசுதேவனும் பார்த்தசாரதியும் கெட்டிக்காரர்களா இருந்தார்கள். நாள்தோறும் பயணஞ் செய்து வந்து அலுத்து விட்டதால், பார்த்தசாரதி இயற்கை அறிவுக்கு ஏற்ப எட்ட வேண்டிய உயரத்தை எட்டவில்லை என்பது என்னுடைய மதிப்பீடு. பள்ளி இறுதிக்கு வந்தபோது, இராமசாமியும் நானுமே முதலிடத்திற்குப் போட்டியிட்டோம். பார்ப்பன நண்பர்களும் கிறுத்துவ நண்பர்களும் கல்விச் சூழலிலிருந்து வருகையில், இஸ்லாமிய நண்பர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/128&oldid=786871" இலிருந்து மீள்விக்கப்பட்டது