பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 103 'சீமையிலே இருக்கிற வெள்ளைக்கார அரசனைக்கூட பாராளுமன்றம் தட்டிக் கேட்கும். நம் வேந்தர்களுக்கு அந்தக் கட்டுப்பாடும் இல்லை. 'அதனால் அப்போதைக்கப்போது, இவர்கள் எதை எதையோ செய்து தொலைக்கிறார்கள். அதைப் பார்த்து, நாமும் அவர்களைப் பின்பற்ற முடியுமா? பின்பற்ற முயன்றால் நாடு நாசமாகப் போய்விடும். 'ஆத்திரத்தில் சொல்லவில்லை. சாபமிடவில்லை. நெஞ்சில் பட்டதைச் சொல்லுகிறேன். உப்புத் தின்றால் தண்ணிர் குடிக்கணும். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் விளைவு உண்டு. 'இப்ப, பாருங்க. அங்கே எங்கேயோ, வடக்கே, 'பகோடா' இல்லை, பரோடா என்று ஒரு சுதேச சமஸ்தானம் இருக்கிறதாம். அங்கே, எல்லாரும் நாலாவது வரையில் கட்டாயமாகப் படிக்கணுமாம். அப்படிக் கட்டளையிடப் போகிறார்களாம். அதற்கு ஆகும் செலவோ வரிப்பணத்திலே இருந்தாம். அப்புறம் வரி ஏறும். நல்லதற்கா இது? 'விநாச காலே விபரீத புத்தி என்று தெரியாமலா சொன்னார்கள்? பள்ளு, பறை பதினெட்டுச் சாதியர்களும் படித்து விட்டால், அப்புறம் உழுவது யார்? பயிரிடுவது யார்? சுடுவது யார்? புதைப்பது யார்? ஊரெல்லாம் நாறிப் போகாதா நாறி! 'அங்கே ஒருத்தனுக்குக் கிறுக்குப் பிடித்த மாதிரி, இங்கே, திருவனந்தபுரத்திலே ஒருத்தனுக்குப் புத்தி கெட்டுப் போச்சு சன்னதித் தெருவில் தீண்டாதவர்களும் நடக்கலாமாம். இப்படி ஒரு கட்டளை. இதை அந்தப் பத்மனாப சாமியே கேட்கணும். தக்க கூலி தரணும். 'அவன் அவன் நிற்க வேண்டிய இடத்தில் நின்றால்தான், ஒழுங்கு மரியாதை இருக்கும். அதைவிட்டுவிட்டு, எவன் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் நடமாடலாம் என்று விட்டுவிட்டால், அதோடு நிற்குமா? அப்புறம் நம் வீட்டுத் திண்ணை மேலேயே உட்காரலாம் என்பானுக! 'வரன்முறை இல்லாமல் போய்விட்டால், அப்புறம் நாமும் எங்காவது தலைமறைவாக காசி இராமேஸ்வரத்திற்கு ஒடிப்போக வேண்டியதுதான். "அப்படியே ஒடநேர்ந்தால் எனக்கு அது ஒன்றும் பிரமாதமில்லை. அங்கேயும், எங்கேயும் இந்தப் பூணுரலுக்கு மரியாதை உண்டு. அதைக் காட்டியே பிழைத்துக் கொள்ளலாம். உங்களை நினைத்தால்தான் கவலையாயிருக்கிறது. * "எப்படி இருந்தவர்கள் நீங்கள், சோழ மன்னனுக்கு அமைச்சராக இருந்த சேக்கிழார் எங்கே? அவர் வழி வந்த நீங்க எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/145&oldid=786897" இலிருந்து மீள்விக்கப்பட்டது