பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 109 "மெய்தான்; இந்தியாவிற்கே வழிகாட்டியாக நம் தமிழ்க்குடும்பம் ஒன்று ஈ.வெ.ரா. குடும்பம் - செயல்பட்டுத் தீண்டாமை ஒழிப்பிற்குப் போராடிற்று. இது நமக்கு தமிழ் நாட்டுக்கு எவ்வளவு பெருமை. வைக்கம் போராட்டம் கடைசியில் வெற்றிபெற்றது. தாழ்த்தப்பட்டோரும் தடுக்கப்பட்டிருந்த தெருவழியே நடக்கலாம். என்று அரசர் ஆணையிட்ட பிறகே போராட்டம் ஒய்ந்தது. தீண்டாமை ஒழிப்பின் முதற் களத்தில் வெற்றி கிடைத்தது; இதோடு நிற்காது. நம் காலத்திலோ, நம் பிள்ளைகள் காலத்திலோ எல்லோரும் கோயிலுக்குள் போகும் நிலை வந்துவிடும். "இதை இப்போதே தொலைநோக்கோடு உண்ர்ந்து தீண்டாமையை மெல்ல மெல்ல விட்டு விடுவோம். ஆதி திராவிடர்கள் முதலில் நம் தெரு வழியே நடக்கட்டும். அதற்கு வழி விடுவோம்' என்று என்தந்தை துரைசாமி கூறினார். தீண்டாமைக்கு என் தந்தை அடித்த சாவுமணி உறவினர் ஒருவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவர் சினத்தோடு, 'பொதுத் தெருவில் நடக்க விடுவது இருக்கட்டும்; உன் வீட்டிற்குள் ஆதிதிராவிடரை நுழையவிட்டுவிட முடியுமா? அதைச் செய்துவிட்டு அப்புறம் ஊருக்கு உபதேசம் பண்ணு' என்று கொக்கரித்தார். 'பொதுச் சொத்தில் உரிமை கொண்டாடுவது வேறு; தனியார் உடைமையில் உரிமை கொண்டாடுவது வேறு; தனியார் உடைமையில் உரிமை கொண்டாடுவது வேறு என்று காரணங் காட்டி நான் தப்பித்துக் கொள்ள மாட்டேன். நாளையே என் வீட்டுக்குள் ஆதிதிராவிடர் ஒருவரை போகச்சொல்லுகிறேன். அப்புறம் நானே உடன் இருந்து, நம் தெரு வழியே நெடுகிலும் ஆதிதிராவிடர் நடந்து செல்ல வைக்கிறேன்" என்று அறைகூவலை ஏற்றுக் கொண்டார் என் தந்தையார். திண்ணையின்மேல் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பேச்சு இவ்வளவிற்கு முற்றிவிடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பொழுது போக்குவதற்காக வாரத்திற்கு ஒரு நாள் கூடி, ஏதோ திண்ணைப் பேச்சுப் பேசப்போக அது இப்படியா முடியனும்? 'துரைசாமி, நம் பக்கத்து ஆற்காடு இராமசாமி முதலியார் என்பது தெரிந்ததுதானே. பேச்சிலே விட்டுக் கொடுப்பாராடி அவரைப் போய் வாதத்துக்கு இழுக்கலாமா? அது கிடக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/151&oldid=786910" இலிருந்து மீள்விக்கப்பட்டது