பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 115 அன்றைய நாட்டுப்புறச் சூழ்நிலையில் என் தந்தை குறிப்பிடத்தக்க ஒரு பணக்காரர். ஆயினும் பணக்காரருக்கு உரிய செருக்கோ, தீய ஒழுக்கங்களோ, அவரைஅண்டியது இல்லை. நூலாடையன்றிப் பிற ஆடையை அணியாதவர். கையில் சிறு மோதிரமும் அணியாதவர். இடுப்பில் ஒர் வேட்டியும், தோளில் ஒர் துண்டும் மட்டுமே அவருடைய உடை. எங்கே சென்றாலும் அதே எளிய உடைதான். வெற்றிலை பாக்கு, பொடி ஏதும் பயன்படுத்தியதில்லை. இவற்றிற்கெல்லாம் சிகரமாக விளங்கியது அவருடைய கடுமையான ஒழுக்கம். தங்கை உறவினர்களாகிய வயது வந்த பெண்களையும் ஏறெடுத்துப் பார்க்காத சாது என்று பெயர் எடுத்தவர். அவ்வளவு நல்லவர்க்கு இப்படியொரு கிறுக்குப் பிடித்து விட்டதே என்று எல்லோரும் திகைத்தார்கள். யாரும் வஞ்சம் தீர்க்க நினைக்கவில்லை. இல்லையெனாது உதவிய தாய் என் தாயும் அக்கம் பக்கத்திலெல்லாம் நல்ல பெயர் எடுத்தவர். இல்லையென்று வந்தவர்களுக்கு எல்லாம் இல்லையெனாது உதவியர். செருக்கே இல்லாதவர். எல்லோரிடமும் மரியாதையோடு நடந்தவர். எவரும் என் தாயிடம் குறை கண்டதில்லை. சுற்றுப்புற ஊர்ப்பெண்கள், சிறு வயதில் என்னைப் பார்த்தால், 'ஏன் அப்பா, சாரதா மகனா நீ' என்றே அன்புடன் கேட்பார்கள். அவ்வளவு புகழ் பெற்றவர். என் தாயாருக்கு வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம்கூடக் கிடையாது. செல்வர் வீட்டு மகளாயினும், செல்வர் மனைவியாயினும் படாடோபமோ, ஆடம்பரமோ அறியாதவர். வெளிச்சம் போடாதவர். எனவே எவருடைய பொறாமையையும் எழுப்பாதவர். எங்கள் குடும்பத்திடம் மற்றவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பு. இச்சிறு புரட்சிக்குத் துணையாயிற்று. காலத்தின் போக்கும் நெடுநாள் காத்துக்கிடந்த இச்சீர்திருத்தத்திற்கு உதவியாயிற்று. இந்திய உரிமை அலை எழுந்தது! எண்ணங்கள் நுண்ணியவை: கண்ணுக்குத் தெரியாதவை. ஆயினும் அவை ஆற்றல் மிக்கவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/157&oldid=786922" இலிருந்து மீள்விக்கப்பட்டது