பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நினைவு அலைகள் பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில், இரண்டுங் கெட்டான் பருவத்தினராகிய மாணவர்களை அரசியல் சண்டைகளுக்குத் தள்ளிவிடும் போக்கு வளர்ந்தது. அப்போக்கினை நோக்கும் போதெல்லாம் என் மாணவப் பருவகாலத்தை எண்ணி ஏங்குவதுண்டு. பண்ணையார்களின் பங்காளிச் சண்டைகளுக்கு அவர்களின் பண்ணையாள்கள் முற்காலத்தில் பயன்பட்டார்கள். இக்காலத்தில் அரசியல் பண்ணையார்களின் சண்டைகளுக்குச் சிப்பாய்களாக அதே பண்ணையாள் பிரிவைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்தான் பயன்படுகிறார்கள். இப்படிப்பட்டதற்கொலையிலிருந்த அவர்களைத் தடுத்தாட்கொள்வதற்கு எவரும் இல்லையே என்றெண்ணிப் பலமுறை கண்ணிர் வடித்திருக்கிறேன். 13. காஞ்சி: மேலும் சில நினைவுகள் நாங்கள் விளையாடிய பக்தி விளையாட்டுகள் பல்வேறு காரணங்களால் இளமைப் பருவத்தே சாதி உணர்வு மரத்துப் போனவனாக மாறிவிட்டேன். எனவே, என் தமிழாசிரியர் திரு. நரசிம்மாச்சாரியார், என்னை 'ஒட்டன்' என்று அழைத்ததைப் பற்றிச் சிறிதும் புண்படவில்லை. அதற்குப் பின்னரும் வழக்கம்போல் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டேன். பள்ளி மாணவனாக இருந்தபோது நானும் என் உறவுப் பையன்கள் சிலரும் சேர்ந்து பக்தியைக் காட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவோம். திருவிழாவின்போது, பித்தளைப் பிள்ளையார், இராமன் முதலிய சிலைகளை வாங்கினோம். அவற்றிற்கு விழா எடுப்பதே எங்கள் விளையாட்டு. விடுமுறை நாள்களில் நெய்யாடுபாக்கத்திற்குச் செல்வோம். அங்குச் சிலைகளுக்கு விழா எடுத்து விளையாட நிறைய வாய்ப்புக் கிடைக்கும். வீட்டுப் புறக்கடையிலுள்ள மலர்களை, பூக்குடலையில் கொண்டுவந்து சேர்ப்பது எங்களில் ஒருவருடைய முறையாக இருக்கும். படைப்பதற்குப் பொங்கல் செய்வது மற்றொரு பையனின் பொறுப்பு. நீராட்டி அலங்கரித்து ஆராதனை செய்வது மூன்றாமவர் பொறுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/160&oldid=786931" இலிருந்து மீள்விக்கப்பட்டது