பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நினைவு அலைகள் இந்தக் கோரக் காட்சிகளைக் கண்டு சிறுவர்கள் பதறுவார்கள். பெரியவர்கள், எதையும் பொருட்படுத்தாது மிருகங்களாகப் போவார்கள். மனிதன் மிருகமாக மாறி, நெடுங்காலமாகி விட்டதை இந்தக் காட்சி நினைவூட்டும். அக்கோரத்தை நினைத்தால், இன்றும் என் நெஞ்சம் பதறுகிறது. திருவிழாக்களும் தெருக்கூத்துகளும் காஞ்சிபுரம், கோயில் விழாக்களுக்குப் பேர்போனது. எங்கள் வீட்டில் இருந்தபடியே எல்லா உலாக்களையும் கண்டு மகிழலாம். வரதராசப் பெருமாள் கருடசேவை, தேரேற்றம், ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம் ஆகியவற்றைப் பார்க்க அதற்குரிய இடங்களுக்குச் செல்வேன். ■ பெரும்பாலும் என்பாட்டி என்னை அழைத்துக்கொண்டு போவார். மக்கள் கூட்டத்தின் நெரிசலில் மிதிபட்டுப் போகாமல் வந்து சேர்வது பெரும்பாடு எப்படியோ பிழைத்து வந்தேன்! என் இளமைக்கால கோயில் குளங்களை நினைத்தால் வறட்சி நினைவுக்கு வருவதில்லை. ஏன்? எப்போதும் குளங்கள் நிறைந் திருக்கும். ஆனால் பச்சைப் பசேலென்று பாசி படராத ஒரு கோயில் குளத்தையும் கண்டதாக எனக்கு நினைவு இல்லை. நான் காஞ்சியில் படித்தபோது சினிமாக்கள் இல்லை. அதனால் காசு தேடத் தேவையில்லை. கச்சாலீசுவரர் கோயிலுக்கு அருகில் தகர நாடகக் கொட்டகையும் மஞ்சள்நீர்க் கால்வாய்க் கரையில் ஒரு தகர நாடகக் கொட்டகையும் இருந்தன. அவற்றிலும் பல நாள்கள் நாடகம் நடப்பதில்லை. தெருக் கூத்துகள் மட்டும் நிறைய நடக்கும். என் பாட்டி பலவற்றிற்குப் போய் வருவார்கள். தெருக் கூத்து எனக்கு அவ்வளவு பிடிக்காது. சிலமுறை மட்டுமே என் பாட்டியுடன் சென்றிருக்கிறேன். ஒருமுறை, எங்கள் ஊர்ச் சலவைத் தொழிலாளி, ராஜூ, பாரதப் போரில் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன். என் பாட்டியோடு சென்றேன். மேடையிலே அவர் குதித்த குதி பிரமாதம். கைதட்டல்கள் அடிக்கடி எழுந்தன. அவர், தேரைவிட்டுக் கீழே குதித்தான் சல்லி ராசன்! மோரைவிட்டுக் கூழைக் கரைத்தான் சல்லிராசன். என்று பாடி, பாராட்டைக் கொள்ளை கொண்டது என் நினைவில் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/164&oldid=786936" இலிருந்து மீள்விக்கப்பட்டது