பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 139 ஆற்றல்களை வளர்ப்பதற்கு ஆளுக்கு ஆள் ஆளுக்கு நான்கு ஆள் என்னும் முறை போதும். இவ்வகையில்தான், ஸ்தபதிகள் உருவானார்கள்: சித்த மருத்துவர்கள் உருவானார்கள்; பொற் கொல்லர்கள் உருவானார்கள்; இசைவாணர்கள் வளர்ந்தார்கள். பலரையும் சேர்த்து ஒரு வகுப்பாக்கி, கற்பிக்கும் முறையில் சிக்காமலே, அறிவை ஆற்றலைப் பெற்றுவிடக் கூடும். ஆனால் மற்றொரு கூறு எப்படி வளரும்? உள்ளமும் உணர்வும் நல்வழி வளர வேண்டுமே இணைந்திருக்கும் முறையில் பக்குவப்பட வேண்டுமே! 'நானே எல்லாம்; நான் விரும்பியபடியே ஆட ஒப்பினால் மட்டுமே கூடித் தொழில் புரிவேன்; அப்படிச் சேர்ந்து பாடுபடுகையிலும் என் கெட்டிக்காரத்தனத்திற்கேற்ப எடுத்துக் கொள்வேன்' என்னும் தன்னலக் கண்ணோட்டமும் போக்கும் அழியவேண்டும். அதற்கு ஏற்ற வழி என்ன? சான்றோர் ஒருவரிடம் பழகிப் பண்படுவது, ஒரளவே வெற்றி பெறும். பரந்த சமுதாயத்தில் கலந்து பழக, கலந்து பணிபுரிய தேவைப்படும் அளவு பக்குவத்தைக் குருசீடர் மரபு விரிவாக வளர்க்காது. பலவகை, பலநிலைத் தோழர்களோடு, சேர்ந்து படிக்கும் முறையே அதை வளர்க்கும். புதிய சமுதாயக் கல்விமுறை எங்கோ ஒருவரிடம் இப்பக்குவம் இருத்தல், இன்றைய தேவைக்குப் போதாது. முடிந்தால் எல்லோரிடமும், முடியாதபோது, பெரும்பாலோரிடமாகிலும் வருங்கால வாழ்க்கை முறையான, பொருந்தி வாழ்தல், அகந்தையை அகற்றி வாழ்தல், துணையாகி வாழ்தல் ஆகியவற்றைப் பலரும் கூடிப் படிக்கும் கல்விக் கூடங்களில் மட்டுமே பெறமுடியும். 'குடிமக்கள் சொன்னபடி குடியாட்சி என்பது இந்நூற்றாண்டின் வாழ்க்கை முறை; இதுவே, வருங்கால வாழ்க்கை முறையும் ஆகும். இதற்கு இளைய தலைமுறையினை ஆயத்தஞ் செய்வதில் கல்விக்கூடங்கள் நாட்டஞ் செலுத்தவேண்டும். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அறிவு நரம்புகளை வளர்க்கும் பணி செம்மையாகவே நடந்தது. எனக்கு நல்லாசிரியர்களாக வாய்த்தவர்களின் ஆர்வமிக்க தொண்டு இதற்குக் காரணம். அது மட்டுமா? அதைவிட ஆழமான காரணம் ஒன்றிருந்தது. அது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/181&oldid=786971" இலிருந்து மீள்விக்கப்பட்டது