பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 143 'தத்தகா புத்தகா என்று தவித்தேன். ஆட்கள், கைகளையும் கால்களையும் இயக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தார்கள். ஒருமுறை கிணற்றைச் சுற்றி வந்தேன். அச்சம் ஒரளவு அகன்றது. படிக்கட்டில் சிறிது நேரம் ஒய்வு எடுத்தேன். பிறகு மிதந்தேன்; என்னைக் கட்டியுள்ள வேட்டிமாமாவின் கையில் பத்திரமாக இருந்தது. பலநாள் இப்படிப் பயிற்சி பெற்றபின் துணிவு வந்தது. கட்டிப்பிடிக்கும் வேட்டியின்றியே, நீந்தி வந்தேன். பல சுற்றுச் சுற்றினேன். இப்போது நடுக்கமோ களைப்போ இல்லை. பிறகு நானே, யாருடைய காவலும் இன்றி நீந்தப் போவேன். பல்லாண்டுகள், விடுமுறைக் காலங்களில், நீந்தலே என் பொழுது போக்காயிற்று. என் தந்தைக்குச் சீட்டாட்டம் தெரியும். ஆனால் ஆடமாட்டார். மாமா, மாணவப் பருவத்திற்குப் பின்னர் சீட்டு ஆடக் கற்றுக் கொண்டார். சிலவேளை ஆடுவார். காசு வைத்து யாரும் சீட்டு ஆடுவதில்லை. இளைஞர்களாகிய எங்களைச் சீட்டாடும் இடத்தை அண்டவிட மாட்டார்கள். நான் படிப்பை முடித்த பின்னரும் சீட்டாடக் கற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பொல்லாத நோய் பிடிக்காததைப் பற்றி எனக்கு மகிழ்ச்சி. வெற்றிலை போடும் பழக்கம் வீட்டில் எவருக்கும் இல்லை. எனவே, அதன் மேல் நான் நாட்டஞ் செலுத்தவில்லை. புகை பிடிப்போர் யாரும் எங்கள் தெருவில் இல்லை. எனவே அதுவும் தெரியாது வளர்ந்தேன். பொறுப்பேற்கும் இயல்பும் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். படிக்கிற பிள்ளைகளுக்கு ஒரு வேலையும் இடக்கூடாது' என்று பல குடும்பங்கள், பிள்ளைகளை வெறும் பொம்மைகளாக வளர்ப்பதுண்டு. என் தந்தை அப்படிச் செய்யவில்லை. காஞ்சிபுரத்திலிருந்து ஊருக்குச் சென்றால், ஏதாவதொரு பொறுப்பைக் கொடுப்பார். கழனிகளைச்சுற்றிப்பார்த்துவிட்டு வருதல் முதல் ஒப்படியைக் கண்காணிக்கும் வரையில் பலவித வேலைகள் எனக்கு இளமையிலேயே பழக்கமாகிவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/185&oldid=786975" இலிருந்து மீள்விக்கப்பட்டது