பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நினைவு அலைகள் நெடுநாளி ருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்எல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதும்நான் நான்எனக் குழறியே ஒன்றைவிட் டொன்றுபற்றிப் பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையைஅருள்வாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே. இது எனக்குப் பிடித்தமான பாட்டு, என்னுள் கலந்துவிட்ட பாட்டு. இப்பாடலை, நானே தேடிப் படித்தேன் இல்லை. என் தமிழ்ப் பாட நூலிலே இடம் பெற்றிருந்தது; மனப்பாடப் பகுதியாகவும் வந்தது. எனவே, அதை மனப்பாடஞ் செய்திருந்தேன். மனப்பாடஞ் செய்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆற்றல் உண்டா? வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொள்ள முடியுமா? முடியும். சிலராலா? இல்லை; பலராலும். அப்படியா என்று திகைக்கத் தேவையில்லை. தமிழ் மண்ணிலே, வாழையும் பலாவும் மாவும் இயற்கையாக வளரும். அதுபோல், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனப்பாடஞ் செய்யும் ஆற்றலும் இயற்கையாக உண்டு. பல தலைமுறைகளாகப் படித்து வருபவர்களுக்கு மட்டுமல்ல. பல தலைமுறைகளாகத் தற்குறிகளாகவே, தாழ்ந்துவிட்டவர்களிடமும் அவ்வாற்றல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. எழுபது வயதிற்கு மேற்பட்ட பழைய கால ஆதிதிராவிடப் பெரியவரை அண்டுங்கள். படிக்காத அப்பாட்டனாரும், அரிச்சந்திரன் கதையும் நல்லதங்காள் கதையும் சத்தியவான் சாவித்திரி கதையும் பாடல்களாகவே, ஒப்புவிப்பதைக் காணலாம். அவை, காது வழிக் கேட்டுக்கேட்டு அறிவில் பதிந்துவிட்டன. இளமையில் பதிந்து முதுமையிலும் ஒளிவிடுகின்றன. ஒரு முறை மனப்பாடம் பண்ணிவிட்டால் நூறு முறை ஒப்புவித்தாலும் மறப்பதில்லை. மனப்பாடத்தால் நன்மையும் உண்டா? உண்டு. சிறந்தவை மனப்பாடஞ் செய்தல், வாழ்க்கைக்கு ஊன்றுகோல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/196&oldid=786987" இலிருந்து மீள்விக்கப்பட்டது