பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 155 தமிழ் மன்ற மாணவர்களுக்கு மேற்படி தாயுமானவர் பாடல் பழக்கமானது. எனவே, நான் ஒப்புவிக்கும்போது, அவர்கள் உள்ளம் சிறகடித்துப் பறக்கவில்லை; மாறாக அப்பாடலில் ஒன்றிவிட்டது. பேச்சு மூச்சுவிடாமல் கேட்டார்கள். அப்பாடலை முடித்ததும் கையொலி பெரிதாக இருந்தது. கைகால்கள் தந்தி அடித்ததையும், உடலெல்லாம் வியர்த்ததையும் நொடிப்பொழுது மறந்துவிட்டேன். 'மற்றோர் பாடல்' என்னும் ஒலியைக் கேட்டு, நினைவு பெற்றேன். தயங்கவில்லை; தொடங்கிவிட்டேன்; பாட இல்லை; ஒப்புவிக்கத் தொடங்கினேன். கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங் கரடிவெம் புவிவாயையுங் கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங் கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலின் இரதம் வைத் தைந்துலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாஞ் சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு சரீரத்தி னும்புகுதலாஞ் சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந் தன்னிகரில் சித்தி பெறலாஞ் சிந்தையை அடக்கியே கம்மா இருக்கின்ற திறமரிது சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட் அறிவான தெய்வமே தேசோமயானந்தமே! என்னும் மற்றோர் தாயுமானவர் பாடலை ஒரே மூச்சாக ஒப்புவித்த பிறகே, ஒய்ந்தேன். அப்போதும் கையொலி பெரிதாக இருந்தது. இப்பாடலும் பாட நூலில் மனப்பாடப் பகுதியில் சேர்ந்தது. கேட்டிருந்தால், தாயுமானவருடைய பாடல்களில் மேலும் சிலவற்றை ஒப்புவித்திருப்பேன். அமுதத்தையும் அளவிற்குமேல் உண்ணலாகாதே! எனவே மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாறினோம். வகுப்பறைப் பாடங்களைப் போன்றே, மன்ற நடவடிக்கைகள் தேவையானவை. நாட்டஞ் செலுத்த வேண்டியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/197&oldid=786988" இலிருந்து மீள்விக்கப்பட்டது