பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நினைவு அலைகள் கூடிய வரையில் எல்லா மாணவர்களும் ஏதாவதொரு புறப்பாட நடவடிக்கையில் பழக்கப்படும் அளவிற்கு, இவற்றிற்கு நேரமும் கவனமும் பொருளும் செலவிடும் நன்னாளும் எந்நாளோ? நான், இளமைப் பருவத்தில், அடர்ந்து நீண்ட முடியுடையவன்; அதைத் துப்புரவாக வைத்துக்கொள்வது பெரும்பாடு. எங்கிருந்தோ ஈரும் பேனும் சேர்ந்துவிடும். முடியைக் கத்தரித்துக் கொண்டு, கிராப் தலையனாக விரும்பினேன். தந்தையிடம் கூறினேன். அவர் உடன்பட்டார்; ஆனால்? அவர் அம்மா, - என் பாட்டி - உடன்படவில்லை. அக்கால நாட்டுப்புறங்களில், கிராப்புத் தலை, கிறுத்தவர்களின் சின்னம் என்னும் மூடநம்பிக்கை யொன்று இருந்தது. அது என் பாட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. 'கிராப் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையவிட மாட்டேன்' என்றார். தான் எனக்குச் சமைத்துப் போட முடியாதென்று மிரட்டினார். சமையலுக்கு மாற்றாள் இல்லை. எனவே மிரட்டலைப் பொருட்படுத்த நேர்ந்தது. பாதிக் கிணறு தாண்டும் வழியைக் கூறினார், என் தந்தை. 'வழக்கம்போல், முடியின் முன் பாதியை மழித்துக்கொள். பின் பாதியை நீளமாக வைத்திருப்பதற்குப் பதில் கத்தரித்துக் கொள்' என்பது. இது சுதேசிய வழி. இந்த இந்தியன் கிராப்புக்குப் பாட்டி தடை சொல்லவில்லை. மனிதன் மேற்கொள்ளும் மாற்றம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிக்கலைக் கிளப்பும். தலையில் ஈரும் பேனும் சேராதிருக்கும் பொருட்டு இந்தியன் கிராபிற்கு மாறியபோது, முக்கியமான ஒன்றை மறந்துவிட்டேன். நெய்யாடு பாக்கம் மருத்துவர், பழைய காலத்து ஆள். அவருக்குக் கிராப் செய்யத் தெரியாது. இந்தியன் கிராப்பும் வராது. மரபுவழி மழித்தலே தெரியும். நீண்ட கோடை விடுமுறையின்போது என் தலையை அவரிடம் நீட்டினேன். 'எனக்கு இந்த வேலை தெரியாது சாமி என்றார். 'ஒன்றும் பெரிய காரியம் அல்ல. மெல்ல இரண்டு முறை செய்தால் பழகிப் போகும், ' என்று யாரோ மூத்தவர் அவருக்குத் தைரியம் சொன்னார். இதை அவரால் மறுக்க முடியவில்லை. கத்தரிக்கோல் என் தலைமுடியில் நடனமாடியது. முடிவில் கைக் கண்ணாடியைக் காட்டினார். எனக்கு அடக்க முடியாத அழுகை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/198&oldid=786989" இலிருந்து மீள்விக்கப்பட்டது