பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நினைவு அலைகள் = பெரும்பாலோருடைய உடையாகிய சூட்டும் கோட்டும் அணிந்தே நான் கல்லூரிக்குச் செல்லவேண்டும். பண்டிதர் எனக்கு 'டை கட்டக் கற்றுக் கொடுப்பார். பூட்ஸ் அணிவதும் நான்கு நாள்களுக்குப் பிறகு பழகிவிடும். காலுறை அணிந்துகொண்டால் பூட்ஸ் காலைக் கடிக்காது. இப்படி முடிவு செய்துகொண்டு துணிக்கடைக்குச் சென்றோம். உயர்நிலைப் பள்ளி மாணவனாயிருந்தபோது எனக்கு வண்ண உடை பிடிக்காது. மேலும் கீழும் வெள்ளாடையே உடுத்துவேன். கல்லூரிப் பருவத்திலும் அப்படியே உடுத்த விரும்பினேன். அதைக் கேட்ட கடைக்காரர், அருமையான வெள்ளைத்துணி இருக்கிறது என்று சொல்லியபடியே, ‘சாடின் என்னும் பளபளப்பான வெள்ளைத் துணிக் கட்டை விரித்துப் போட்டார். அது வழவழப் பாகவும் இருந்தது. எனக்குத் துணி நோட்டம் தெரியாது. பெரியவர்கள் விருப்பத்திற்குத் துணி வாங்குவதை விட்டு விட்டேன். நான்கு சூட்டுகளுக்கு வேண்டிய அளவு துணியை வாங்கினார்கள். 'வுர்ட்'டிற்காக, பளபளக்கும் வெள்ளை 'டிவில்லைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆறு ஷர்ட்டுகளுக்குத் துணி வாங்கினார்கள். இரண்டு துணிகளும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியானவை. நல்ல தையல்காரரைத் துணிக்கடைக்காரரே அறிமுகப்படுத்தினார். சூட்டுசெட்டு ஒன்றுக்கு ஆறு ரூபாய் கூலி, ஷர்ட்டுக்குப் பத்தனா கூலி, இதில் பேரம் ஏதும் இல்லை. குறித்த நாளில் உடைகளெல்லாம் தயாராக இருக்கும் என்னும் உத்தரவாதத்தைத் துணிக்கடைக்காரரே கொடுத்தார். சூட்டையும் ஷர்ட்டையும் தைக்கச் சொல்லி, துணியைக் கொடுத்துவிட்டு வெளியேற முயன்றோம். 'இளைஞர் அருமையான சூட்டுபோட்டுக்கொண்டு, இந்தியன்' கிராப்போடு போவது நன்றாயிராது. நான் சொல்லுகிறேனே என்று வருத்தப்படாதீர்கள். தலை இப்படி இருப்பதைப் பார்த்து மாணவர்கள் சிரிப்பார்கள். 'மேனாட்டுக் குல்லாய் (Hat) போட்டால், வகுப்பில், அதை எடுத்து விட்டே உட்கார வேண்டும். அப்போதும் சிரிப்பார்கள். முழு கிராப்பாகும் வரை 'தொப்பி போட்டுக் கொள்ளுதல் நல்லது. வகுப்பில் அதைக் கழற்றத் தேவையில்லை' என்று துணிக்கடை முதலாளி கூறினார். அதுவே சரி என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள். எனக்கு மறுப்பு சொல்லத் தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/220&oldid=787014" இலிருந்து மீள்விக்கப்பட்டது