பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. கல்வி வளர்ச்சியின் படிகள் இரட்டை ஆட்சியில் ஏற்பட்ட நன்மை அன்னிய ஆட்சிக் காலத்தில், செல்வர்கள் வீட்டுக் காளைகள், பெரிய அதிகாரிகள் வீட்டுச் செல்வங்கள் நிறைந்திருந்த விக்டோரியா மாணவர் விடுதியில் இப்போது, சமுதாயத்தின் அடித்தட்டுகளில் இருந்தவர்களின் பிள்ளைகளே குவிந்திருக்கிறார்கள் என்னும் தேன் வந்து என் காதுகளில் பாய்ந்தது. அதே நொடி என் எண்ணம் பறந்து ஒடியது. பிழைக்கத் தெரியாத மனம்! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்! அப்போது நான்காம் வகுப்பு வரையிலாவது, இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கொடுக்கும் வகையில் சட்டமியற்ற, நாட்டுப்பற்றுள்ள அறிஞர் கோபாலகிருஷ்ண கோகலே எடுத்துக் கொண்ட முயற்சிகள்; அது முடியாது’ என்று ஆங்கில ஆட்சி எதிர்த்தது: சட்டம் வராமல் போனது; இத்தனையும் மின்னின. அடுத்து? வேறு வழியின்றி, ஆங்கிலேயன் இந்திய மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையைப் புகுத்தியது. நிதிப்பொறுப்பைத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, பழிக்கு ஆளாகும் பொறுப்புகளை மட்டும் இந்திய அமைச்சர்களிடம் விட்டது. உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கு இருபக்கம் இடி. இரட்டை ஆட்சியின் கீழ் செயல்பட்ட அமைச்சர்களுக்கு இருபக்கமும் இடி. தேசத் துரோகிகள் என்று ஒரு பக்கம் இடி. இதையும் அதையும் செய்யப் பணம் இல்லை என்று ஆங்கில நிர்வாக சபை உறுப்பினரின் இடி. இரண்டிற்கும் இடையிலும், சர்க்கஸில் உயரக் கம்பியின்மேல் நடப்பது போல் நடந்து, சில முற்போக்கு முறைகளைத் தொடங்கியது. பனகல் அரசரின் தலைமையிலான நீதிக்கட்சி மந்திரி சபையில், கல்வி அமைச்சர் பாத்ரோ, சென்னை மாநிலத் தொடக்கக் கல்விச் சட்டத்தை நிறைவேற்றி, கோபாலகிருஷ்ண கோகலேயின் தோல்விக்கு ஈடுசெய்தது! கல்வி வெள்ளம் மடை திறந்து எல்லாப் பக்கமும் பாய்ந்து விடுமென்று அஞ்சி, படிப்பிற்கு முந்திக் கொண்டோர் தூற்றித்துாற்றிப் பொசுக்கியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/251&oldid=787053" இலிருந்து மீள்விக்கப்பட்டது