பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவு அலைகள் "எம்மாம் பெரிது’ என்று வியக்கும் பேரறிஞர் பட்டங்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எட்டாதவை அல்ல; கிட்டக்கூடியவைகளே, என்பதை மேதை அம்பேத்கார் உலகறியச் செய்துவிட்டார். சட்டப்படிப்பு ஆதிதிராவிடர்களுக்கு எட்டும் என்பதை திரு. சிவராஜ் மெய்ப்பித்துக் காட்டினார். பரமேசுவரனும், பாலசுந்தரமும், புஷ்பராஜூம், தனசிங்கும் எளிதாகத் தேர்ச்சி பெற்றுக் காட்டிய பிறகும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தயங்குவானேன்? தவறுவானேன்? இழிவை ஏற்றுக் கொள்வானேன்? பொறியியல் விற்பன்னர் ஆகமுடியும் என்று பிச்சுமணி போன்றவர்கள் விளக்கிவிட்டார்கள். இனியும் மலைப்பு ஏன்? --- 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' இது பொய்யாமொழி: பொதுநெறி. எனக்கும் பொருந்தும்; மற்றவர்களுக்கும் பொருந்தும்; மனிதர்கள் எல்லோருக்கும் பொருந்தும். 'முயற்சி திருவினையாக்கும்' என்பதை நினைவில் நிறுத்தினால், 'ஒன்றே செய்க: அதுவும் நன்றே செய்க" என்று மணிக்கு மணி நினைவுபடுத்திக் கொண்டால், - 'உழைப்பின்வாரா உறுதிகள் உளவோ?’ என்று வேளைக்கு வேளை கேட்டுக் கொண்டால், முயலையும் வெல்ல முடியும்; ஆமை இடையறாது, சோம்பாது முயன்றால் என்று உணர்ந்தால், 'கல்விக்கன்னி, பொறாமைக் கன்னி, வேறொன்றை நோக்கினாலே, கல்வி சுணங்கும் என்னும் தெளிவு ஏற்பட்டு விட்டால், 'போகிற போக்கிலே, பெறமுடியாது தரமான கல்வியை, ஒரு மனப்பட்டுக் கற்கும்போது பல்வகைக் கல்வியும் எளிதாகும் என்பதைத் தெரிந்து முயன்று நடந்தால், தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கியவர்களும் ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்னும் நிலையில் சிக்கிக் கொள்வார்களா? 'நம் கல்விக்குச் சில மணி, பிறர் சண்டைக்குப் பல மணி செலவிட்டுவிட்டு, ஏமாறுவார்களா? மற்றவர்களைப்போல், கருமமே கண்ணாயிருப்பார்களே! ஒருமனப்பட்டுப் படிப்பார்களே! 'படியுங்கள் படியுங்கள் மேலும் படியுங்கள் என்பதை வாழ்க்கை நெறியாக்கிக் கொள்வார்களே! இப்படி என் சிந்தனை சுழலும்போது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/254&oldid=787056" இலிருந்து மீள்விக்கப்பட்டது