பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 217 புறமுதுகிட்டு ஒடும் நிலையிலா? இல்லவே இல்லை. மார்பிலே வேல் தாங்கி வீழ்ந்தான் வீரப்பயல். தேறினாள்; மகிழ்ந்தாள். இவ்வீரக் கதையை எத்தனை முறை கேட்டோம்! எத்தனை சொல்லின் செல்வர்கள் கூறக் கேட்டு நிமிர்ந்தோம்! அச்செய்தியை ஊடுருவிப் பார்ப்போம். பால் மணம் மாறாப் பாலகன், போருக்குச் சென்றது எப்போது? வீட்டில் மூத்தவர்கள் இருந்தபோதா? இல்லை. மூத்தவர்கள் வரிசைப்படி போராடி மாய்ந்த பிறகே, பாலகனுக்கு அண்ணன் எவரும் இல்லை என்னும் நிலை வந்தபோதே, தாய் தட்டிக் கொடுத்துப் போர்க்களம் அனுப்பினாள். இதுவே முறை. இதுவே விவேகம். இந்த விவேகம், அந்தப் புறநானூற்றுப் பாடலில் இழையோடி யிருப்பதை மறத்தல் ஆகாது; மறுத்தல் ஆகாது. பொறுப்புணர்ந்த தலைவர் அப்போதுதான் சேர்த்து எடுத்த ஈர நெல்லை விதைப்பது தவறு. அதைப் போன்றதே பள்ளி, கல்லூரி மாணவர்களை அரசியலில் விதைப்பதும். இளவட்டங்கள், அறிவிலும் ஆற்றலிலும் முற்றிக் கனிந்து, ஒன்றுக்குப் பத்தாகப் பயன்படவேண்டியவர்கள். அப்படியிருக்க, ஆத்திரத்தில், இவர்களை ஊர் வம்புகளில் தள்ளிவிடுவது இளைஞர்களுக்கும் இழப்பு: அவர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு. இக்கொள்கையையே பெரியார் பொதுமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்; மூதறிஞர் இராஜாஜி ஆதரித்தார். இதையே என் தந்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். கொள்கைப் பிடிப்புள்ள என் தந்தை என் தந்தைக்கு அரசியல் ஈடுபாடு நிறைய. ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அவர் சுழன்று சுழன்று வேலை செய்வார். 1920, 23, 29 ஆண்டுகளில் நடந்த சென்னை சட்டமன்றத் தேர்தல்களில், திரு. ஆ. இராமசாமி முதலியார் எங்கள் மாவட்டத்தில் வேட்பாளர். எங்கள் பகுதியாகிய மாகறல் பிர்க்காவில் இராமசாமி முதலியாருக்கு வாக்குத் திரட்டும் பொறுப்பை என்னுடைய தந்தையார் ஏற்றிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/259&oldid=787061" இலிருந்து மீள்விக்கப்பட்டது