பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நினைவு அலைகள் சவ்வாது மலையிலே பிறந்து, கிழக்கே ஒடி, திருமுக்கூடலில் பாலாற்றோடு இரண்டறக் கலந்துவிடும் எங்கள் சேயாறுமே தன்னளவிற்கு விளம்பரமில்லாத தொண்டாற்றி வருகிறது. பத்தாண்டுகளாகவா? இல்லை. அதற்கு மேலும். நூறாண்டு களாகவா? இல்லை! பல நூறு ஆண்டுகளாக. பல்லவன் காலத்தில் பணிபுரிந்தது; வளப்படுத்திற்று. சோழன் காலத்தில் பயிர்களைக் காத்தது. எத்தனை தொன்மையானதானாலும் எவ்வளவு சிறப்புகளைப் பெற்றதானாலும் மக்கள் இனத்தோடு, இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்னும் சீரிய பாடத்தைக் கற்பிக்கவே, அடக்கமாக ஒடிக்கொண்டிருக்கிறது சேயாறு'; அதாவது செய்யாறு. பொதுத் தொண்டிலும், கங்கைக்கும் காவிரிக்கும் ஒப்பான பேரியக்கங்களுக்கு இடமிருப்பது போலவே, சேயாறு போன்ற சிறிய இயக்கங்களுக்கும் இடமுண்டு. அத்தகைய நல்ல இயக்கமொன்று, என்னுடைய கல்லூரி மாணவப் பருவத்தில் செயல்பட்டு வந்தது. அதன் பெயர் என்ன? வனமலர்ச் சங்கம். அவ்விதம் பெயரிடக் காரணம் என்ன? 'கானகத்திலுள்ள மலர் தன் வாசனையாலல்லாது பிறருக்குத் தெரியாதது போல, இச்சங்கமும் காரியத்தால்தான் தெரியவரும் என்பதால்! இதன் முதல் தலைவர் யார்? திரு. சு. கோதண்டராமன். அவராலேயே இந்தப் பெயர் முன்மொழி யப்பட்டது. சங்கம் எப்படி இயக்கமாயிற்று? நான்கைந்து பேரூர்களில் விழுதுவிட்டுச் செயல்பட்டு இயக்கமாயிற்று. அது எங்கே முளைத்தது? திருச்சிராப்பள்ளியில் முளைத்தது. என்று முளைத்தது? 6-7-1924 அன்று தொடங்கப் பெற்றது. இளைஞர்கள், வ. அழகப்பன், சு. கோதண்டராமன், ரா. இலக்குமணன், அ. மகாலிங்கம், சிதம்பரம் ஆகியோர் கூடி வனமலர்ச் சங்கத்தைக் கண்டனர். நல்ல சிந்தனைகள் நான்கு திக்குகளிலும் தோன்றுவதுண்டு; பலரிடம் தோன்றுவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/266&oldid=787069" இலிருந்து மீள்விக்கப்பட்டது