பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நினைவு அலைகள் ஏற்கெனவே குடியில் மூழ்கியிருந்தவர்கள், பழக்கக் கொடுமை யால், கள்ள மதுவைத் தேடிச் சென்றார்கள்; திருட்டுத்தனமாகக் குடித்தார்கள். ஆனால், அந்தக்காலக் குடியர்களைப் போல, தெருவில் போவோர் வருவோரை வலுச்சண்டைக்கு இழுப்பதில்லை. வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகளை அடித்து உதைத்து அலறவைப்பதில்லை. கதறும் கூச்சல் கேட்டால், பிடிபட நேரிடும் என்பதைத் திருட்டுக் குடிகாரர்கள் மறப்பதில்லை. எனவே, இரண்டாம் பேருக்குத் தெரியாமல், குடிசைகளில் முடங்கி விடுவார்கள். விழித்து எழும்போது, போதை தெளிந்திருக்கும். மதுவிலக்கு செய்த நன்மை m மதுவிலக்கு நடைமுறைக் காலத்தில் தமிழ்நாட்டுப் பெண்குலம், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, பின் தள்ளப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைப் பெண்குலம் அடி உதையிலிருந்து நீடித்த விடுதலை பெற்றிருந்தது. அது மட்டுமா? நாட்டுப்புறத்து, குடிசை வாழ்வோர் இல்லங்களிலும் உலோகத் தட்டு முட்டுச் சாமான்கள் சேர்ந்தன. வீட்டில் சண்டை சச்சரவு, அடிஉதை, கூச்சல் குழப்பங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. அமைதி வளர வளர, அக்கறையும் கவனமும் பெருகின. தாழ்த்தப்பட்ட பையன்களும் பெண்களும் பள்ளிப் படிப்பில் ஒளிவிட முடிந்தது. மதுவிலக்கு செயல்படத் தொடங்கிய பிறகே, நாட்டுப்புறங்களில் அஞ்சல் நிலையச் சேமிப்பு வங்கிகளும் பிற வங்கிகளும் தலைநீட்ட நீட்ட, நிலமில்லாத தாழ்த்தப்பட்டோரில் பலர் - ஊருக்குப் பலர் - கூலியில் சிறு பகுதியைச் சேர்த்து வைக்க முன் வந்தனர். சொந்தத்தில் நிலம் வாங்கியுள்ளார்கள். கொடுமைக்குள்ளாகியுள்ள தாழ்த்தப்பட்டவர்களை அனைத்து, அடிக்கடி நல்வழிப்படுத்துவோர், ஊக்கப்படுத்துவோர் அருகினாலும் மதுவிலக்கு என்னும் சஞ்சீவி அவர்களில் எண்ணற்றவர்களை மனிதர்களாக்கிவிட்டது. மீண்டும் மது வந்ததால் ஏற்பட்ட தீமை சில ஆண்டுகளுக்கு முன்பு, மது விலக்கை எடுத்தது நினைவிலிருக்கிறதா? அப்போது நான் தமிழ்நாட்டின் ஊர் சுற்றிகளில் ஒருவனாக இருந்தேன். சின்னஞ்சிறு ஊர்களில்கூட, அடகுக் கடைகள் காளான்களைப்போல் முளைத்ததைக் கண்டேன். அக்கடைகளில் எவர்சில்வர் சாப்பாட்டுத் தட்டுகள், குவளைகள், பிற பாத்திரங்களை ஆண்கள் அடகு வைப்பதைக் கண்டு பலவேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/280&oldid=787085" இலிருந்து மீள்விக்கப்பட்டது