பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நினைவு அலைகள் சாரதா சட்டம் திருமண வயது ஆணுக்குப் பதினாறுக்கும் பெண்ணிற்குப் பதினான்கிற்கும் குறையாமல் இருக்கவேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சட்டம் இந்திய சட்டசபையில் ஹரிவிலாஸ் சாரதா என்பவரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வனமலர்ச் சங்கம் நடத்திய பித்தன், சாரதா சட்டத்தை ஆதரித்தது. நாட்டின் வைதீகர்கள் எதிர்த்தார்கள். அவர்களின் முன்னணியில் பெரும் பட்டதாரிகள், தேசியவாதிகள் காட்சியளித்தது வேதனைக்குரிய ஒன்றாகும். அரசியலில் தீவிரவாதியாக இருப்பதாலேயே அவர்கள் பிற துறைகளில் முற்போக்காளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாறக்கூடாது. திருமண வயது பற்றிய மேற்படி சட்டம் நிறைவேறிய பிறகும், நாட்டில் நாலா பக்கங்களிலும் குழந்தை மனங்கள் நடந்து வந்தன. அடியோடு தடுத்து நிறுத்த நாதியில்லை. அண்மைக்காலத்தில், வரவேற்கத்தக்க வகையில், திருமண வயது இருபாலார்க்கும் உயர்த்தப்பட்டது. அத்தகைய முற்போக்குச் சட்டம் ஏட்டில் இருக்கிறது; நடைமுறையில் இல்லை. நல்ல சட்டங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய பொதுமக்களிடம் விழிப்பை, உணர்வை இதுவரை போதிய அளவு வளர்த்தோம் இல்லை. எனவே சமூகச் சட்டமீறல்களும் குழந்தை மனக் கொடுமைகளும் தட்டிக் கேட்பாரின்றி, வெறியாட்டம் போடுகின்றன. பத்தாயிரம் குழந்தைகளுக்குத் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு மகாராட்டிர மாநிலத்தில் இருந்து வந்த செய்தி, நினைக்க முடியாத, மன்னிக்க முடியாத, குழந்தை மனக் கொடுமையினை உலகிற்குப் பறைசாற்றுகிறது. நல்ல நாள் பார்த்துத் திருமணம் செய்தல் என்னும் மூடப் பழக்கம், வாழையடி வாழையாக, நம்மிடையே தொடர்ந்து வருகிறது. நல்ல நாள் என்னும் நம்பிக்கைக்கு இடம் கொடுத்துவிட்டால், மிக நல்ல நாள் தேடுவது இயல்பாகிவிடுகிறது. அப்படிப்பட்ட மிகப் புனித நாள் ஒன்று 1978 ஏப்ரல் 10ஆம் நாள் வந்ததாம். மகா ஒளியுடைய அந்நாளில், மராட்டிய மாநிலத்தில் மாவார் பகுதியில் மட்டும், பத்தாயிரம் பச்சைக் குழந்தைகளுக்குத் திருமணம் முடித்து வைத்தார்களாம். திருமண வேளை, குழந்தை மணமக்கள், பெற்றோர்களின் மடிகளில் துரங்கிக் கொண்டிருந்தார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/284&oldid=787090" இலிருந்து மீள்விக்கப்பட்டது