பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவு அலைகள் அடுத்த இரு நாள்களும் வழக்கமான வாழ்க்கை. பிற்பகல் நான்கு மணிபோல், திண்ணையில் உட்கார்ந்து நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். அமைதியான பேச்சு; அதற்கிடையில் அப்படியே சாய்ந்தார். நண்பர் பதற்றத்தோடு நிமிர்த்தினார். மூச்சு நின்றுவிட்டது. தாத்தா சண்முகம் மறையும்போது, எடுக்கப்பிடிக்கச் சொல்லி யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. தாத்தாவின் வாழ்வு எளிதாக இருந்ததுபோல், முடிவும் எளிதாக இருந்தது. அதிதிகள் அகாலத்தில் வந்தாலும் தம் வீட்டில் உணவு இல்லா விட்டால், உறவினர்கள் வீட்டிற்குள் உரிமையோடு நுழைந்து, அங்கு இருக்கும் உணவைக்கொண்டு வந்து பரிமாறிய தாத்தாவை இழந்தால் எளிதில் ஆறுதல் ஆகுமா? 'திட்டுக்குத் திட்டு, அடிக்கு அடி' என்னும் கொள்கையை ஒதுக்கிவிட்டு, எல்லாரையும் பொறுத்து, எல்லார்க்கும் இயன்ற உதவிகளைச் செய்த தாத்தாவின் குருதி, என்னுள்ளும் அப்படியே இயங்கவேண்டுமென்னும் அவா, துக்கத்தோடு போட்டி போட்டுக் கொண்டு பொங்கிற்று. என் தந்தையார் செய்த புரட்சி நம் வாழ்க்கை முறையில் எத்தனையோ பழக்கங்கள், எப்படியோ புகுந்துவிடுகின்றன. அவற்றில் பலவற்றிற்கு ஏன், எதற்கு என்று நம்மால் விளக்கம் சொல்லமுடிவதில்லை. எப்போதோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் உருவான பழக்கங்கள் காலம் மாறி, சூழ்நிலைகள் அடியோடு மாறிய பிறகும் விடாப்பிடியாகத் தொடர்வதைக் காண்கிறோம். அத்தகைய பழக்கங்களில் ஒன்று நினைவிற்கு வருகிறது. இந்துக்களாகிய நாம், இறந்தவர்களை இடுகாட்டிற்கோ சுடுகாட்டிற்கோ எடுத்துச் செல்கையில், இறந்தவர்களின் பேரப்பிள்ளை களைக் கொண்டு, நெய்ப்பந்தம் பிடிக்க வைக்கிறோம். நல்ல உணவுப்பொருள் பாழாகிப் போவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அது தேவையில்லை என்பதை உணர்ந்தவர்கள் கூட ஊராருக்கும் உறவினருக்கும் அஞ்சி, இச்சடங்கைத் தடுப்பதில்லை. என் பாட்டனார் இறந்தபோது, பேரப்பிள்ளைகளாகிய நாங்கள் நெய்ப்பந்தம் பிடிக்கவில்லை. நெய்யைப் பாழாக்கும் அப்பழக்கத்தை வெட்டிவிட்டார் என் தந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/318&oldid=787154" இலிருந்து மீள்விக்கப்பட்டது