பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 நினைவு அலைகள் அனைத்திந்திய காங்கிரசு இயக்கம் இவருக்கே 'சர்தார்' என்னும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தது. இந்தியாவில் அச்சிறப்பினைப் பெற்ற பெரியவர்கள் எவர்? ஒருவர், வடஇந்தியாவில், பர்டோலியில் வரிகொடா இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய எஃகு மனிதர் வல்லபாய் படேல் ஆவர். அடுத்து நம் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரு. வேத ரத்தினம் பிள்ளை அவர்களுக்கே 'சர்தார் என்னும் சிறப்பினை அளித்தார்கள். 1931ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் பெருமைக்குரிய இப்பட்டத்தை வழங்கினார்கள். நாட்டுப்பற்றிலும் தொண்டாற்றும் திறனிலும் தலைசிறந்த வடநாட்டுத் தலைவருக்கு ஒப்பானவர்கள் தமிழர்களாகிய நம்மிடையே ஒவ்வோர் தலைமுறையிலும் தோன்றி உள்ளார்கள். இதை எண்ணித் தலைநிமிர்ந்து நிற்பதோடு, நாட்டின், உலகின் முற்போக்கு இயக்கங்களோடு, தமிழ் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். புதிய 'சர்தார்'களாக உருவாக வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களை அறியும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் ஆக்கபூர்வமான பொதுத் தொண்டாற்றினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்து நன்னெறி காட்டியதோடு, கல்வி வளர்ச்சிக்குத் துணை நின்றார்; அதற்கு உரமாகிய, பகல் உணவுத் திட்டத்தைப் பரப்புவதில் பங்கேற்றார். 'ஊர் வளர்ச்சி ஊரார் பொறுப்பில் என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுந்த பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தையும் சீருடை இயக்கத்தையும் வளர்த்தார். அதோடு, தாய் தந்தையரை இழந்த பெண்களுக்காக அருள் இல்லம் ஒன்றை அமைத்தார். உணவும் உடையும் உறையுளும் அளித்து அனாதைப் பெண்களைக் காப்பாற்றுவதோடு, அவர்களுக்குக் கல்வியும் கொடுத்து, நல்ல குடிமக்களாக உருவாக்கினார். அவரால் தோற்றுவிக்கப்பட்ட கஸ்தூரிபா கன்யா குருகுலம்' ஏறத்தாழ அறுநூறு பெண்களுக்கு இல்லமாக, கல்வி நிலையமாக, தொழில் பயிற்றுவிக்கும் சாலையாக இன்றும் சிறப்பாக இயங்கிவருகிறது. வேலைப்பழக்கமும் தொழிற் பயிற்சியும் கல்வியின் பிரிக்க முடியாத கூறுகள். இதை உணர்ந்து, அச்சுப்பயிற்சியும் பிற கைவேலைகளும் கற்றுக் கொடுக்கும் அந்தக் கஸ்துாரிபா கன்யா குருகுலம் நம் ஆதரவுக்கு உரியதாகும். வைராக்கியத் தோடு எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு, அதைத் திறம்பட நடத்தும் அவருடைய மகன் அப்பாகுட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/350&oldid=787190" இலிருந்து மீள்விக்கப்பட்டது