பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவு அலைகள் திரு. இலாலி அதுவரை செல்லமாக வளர்ந்தவர். பெங்களுரில் படித்த வரையில் அவரை யாரும் கேலி செய்திருக்க மாட்டார்கள். ஏன்? மைசூர் திவானாயிருந்த முகமது இஸ்மெயிலுக்கு நெருங்கிய உறவினர் திரு. இலாலி. ஆகவே, மற்றவர்கள் தம்மை மதிப்புக்குறைவாக நடத்தியதை, இரண்டொரு நாள்கள் பொறுத்துக் கொள்வதே அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் வகுப்பு மாணவர்களில் நானே பொடியன். விடுதியில் மூன்றாவது ஆண்டு தங்குபவன். எனவே, ஓர் இரவு இலாலி என் விடுதி அறைக்கு வந்தார். மனம் திறந்து, கண்கலங்கப் பேசினார். 'என்னால் அக் கிண்டலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆயினும் தாக்கிப் பேசும் இயல்பு எனக்கு இல்லை. எனவே, சென்னையில் படிப்பதை விட்டுவிட்டு, திரும்ப பெங்களுருக்கே சென்று படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்று என்னிடம் விரிவாகக் கூறினார். நான் பொறுமையை இழக்காமல் கேட்டேன். பிறகு ஆறுதல் கூறினேன்; மேலும் பேசினேன். என்னைக்கூடப் பொடி பொடி' என்று எங்குப் பார்த்தாலும் கிண்டல் செய்ததைச் சொன்னேன். 'சிறப்பு வகுப்பிற்கு வந்த பிறகும் சிற்சிலபோது, அப்படியே அழைப்பது என் நெஞ்சில் குத்துகிறது. ஆயினும், பிறர்க்கஞ்சி ஒடுவது கோழைத்தனம். 'அப்படியிருக்க, இலாலி, கோழைகளின் வழியைப் பின்பற்றக்கூடாது; கிண்டல்களைத் தாங்கிக்கொண்டு, கருமத்தின்மேல் கண்ணாயிருப்பதே தனித்தன்மை. சிரித்தவர்கள் போற்றும் நிலைவரும்; அதுவரை பொறுமையாக இரு. கடமையின்மேல் கருத்தாயிரு’’ இப்படிக் கூறி ஊக்கப்படுத்தினேன். என்னுடைய முயற்சி பலித்தது. அவர் தொடர்ந்து சென்னையில் படித்தார். இலாலியின் புகழும் எனது சங்கடமும் இலாலிக்கு ஏற்கெனவே மேடைப் பேச்சில் பழக்கமுண்டு. மாநிலக்கல்லூரி மாணவர் பேரவையில் பேசத் தலைப்பட்டார். அவருக்கு ஆங்கிலம் ஆற்றொழுக்கா வந்தது. அதோடு பேசும் பொருள் பற்றி முன் கூட்டியே சிந்தித்து, படித்துக் குறிப்பு எடுத்துக்கொண்டு பேசும் பொறுப்புணர்ச்சி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/394&oldid=787248" இலிருந்து மீள்விக்கப்பட்டது