பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅC) நினைவு அலைகள் _ 'அய்யா என்ன காய்ச்சலுங்க?' என்று கேட்டேன். டாக்டர் குருசாமி, எள்ளுங் கொள்ளும் பொரிந்ததுபோல் வெகுண்டார். 'ஏன்? நீயே பெரிய டாக்டராகிவிடக் கேட்கிறாயா? ' என்று சினத்தோடு என்னை மடக்கினார். சிறிதும் அச்சமறியாப் பருவத்தில் இருந்த நான், 'இல்லீங்க அய்யா! விக்டோரியா விடுதி டாக்டர் நாராயணசாமி என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்க முடியாது என்று கைவிட்டுவிட்டார். எனக்கு ஒரே பயமாக இருக்கிறதுங்க' என்று மெல்லிய குரலில் சொன்னேன். "அப்படியா? கவலைப்படாதே, உன் ஸ்பிலின் பெருத்திருக்கிறது. நான் கொடுத்த மருந்தை மூன்று நாள் சாப்பிட்டால் சரியாகிவிடும். நன்றாகவும் நடமாடுவாய். நான்காம் நாள் வா, டானிக் கொடுக்கிறேன். உடம்பில் பழைய வலிமை வந்துவிடும்' என்று ஆறுதல் கூறிவிட்டு அடுத்தவரைக் கூப்பிட்டார். 'டாக்டர் குருசாமி காசு பணம் வாங்க மாட்டார். அவர் கண்பார்வையில் படாத இடத்தில், ஒரு தாம்பாளம் இருக்கும். நோயாளிகள் விரும்பினால், அதில் பணம் போட்டு விட்டுப் போகலாம். இப்படிச் சேரும் பணத்தை அவர் அறத்திற்குச் செலவிட்டு விடுகிறார் என்று எனக்குச் சொன்ன நண்பர், மற்றொன்றும் வேடிக்கையாகச் சொன்னார்; தாம்பாளத்தில் பணத்தைப் போடுவது போல நடித்து, அதில் உள்ள பணத்தை மெல்ல எடுத்துக் கொண்டாலும் கேட்பாரில்லை' என்பது வேடிக்கையாகச் சொன்னது. நோய் நீங்கியது அன்று டாக்டர் குருசாமி வீட்டுத் தாம்பாளத்தில் காணிக்கை போட்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது? டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டைப் பார்த்தேன். அதன் தலைப்பில், வேப்பேரியிலிருந்த மருந்துக் கடையின் முகவரி இருந்தது. வேறு கடையிலும் அம்மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என்பது எங்கள் மூவருக்கும் தெரியாது. அவ்வளவு நாட்டுப்புறம்! கார் ஏறி, தொலைவில் இருந்த மருந்துக் கடைக்குச் சென்றோம். மருந்தை வாங்கிக்கொண்டு விடுதிக்குச் சென்றோம். மாமாவும் அப்பாவும் என்னோடு தங்கினார்கள். காலா காலத்தில் மருந்தைக் குடித்தேன். இரண்டாம் நாள் நடுப்பகல் வெப்பம் தணிந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/402&oldid=787267" இலிருந்து மீள்விக்கப்பட்டது