பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நினைவு அலைகள் தொடர்பு கொண்டேன். விருந்திற்கு நாளும் நேரமும் முடிவு செய்து கொண்டோம். == குறிப்பிட்ட நேரத்திற்கு நடுவருடைய பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தேன். விருந்திற்குமுன், பழைய கால நினைவுகளை அசைபோட்டோம். பேச்சுவாக்கில், அவருடைய விரைவான உயர்வைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். உடனே, என் நண்பர், 'வேலு:அன்றைக்குப் பேராசிரியர் கள்ளுக்காரன் மட்டும், நான் பாடநேரத்தில் பயன்படுத்திய கடுஞ்சொற்களைக் கல்லூரி முதல்வரிடம் சொல்லியிருந்தால், பொது உடைமைக்காரன், 'அடங்காப்பிடாரி' என்ற பட்டம் சூட்டி, சீட்டுக் கிழித்திருப்பார். அக்காலத்தில் அப்படி நீக்கப்பட்ட மாணவரை மற்ற எந்தக்கல்லூரியும் சேர்த்துக் கொண்டு இராது; அப்போது அதற்காக வழக்கு மன்றமும் செல்ல முடியாது. எனவே, கிளர்ச்சிக்காரனாக, எங்கெங்கே சிக்கியிருப்பேனோ! எங்கெங்கு உருண்டிருப்பேனோ? பேராசிரியர் என்னை மன்னித்தது, நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அப்புறம் பொறுப்போடு மட்டுமல்லாது, கட்டுப்பாடோடும், கடமை உணர்வோடும் படித்தேன்; நடந்தேன். 'அந்தக் கட்டுப்பாடு என் அரசியல் வாழ்க்கைக்கும் பயன்பட்டது. சொல்ல வேண்டியதை அஞ்சாமல் சொன்னபோதும், எரிச்சல் ஊட்டாதபடி சொல்லக் கற்றுக் கொண்டேன். எனவே, வழக்கறிஞராகவும் வெற்றி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி. "அது எனக்கு நல்வாழ்வைத் தந்தது; பதவி உயர்வுக்கு உதவிற்று. இன்று நான் உயர்நீதிமன்ற நடுவரானதுக்கு நம் பேராசிரியர் கள்ளுக்காரனுடைய பெருந்தன்மைக்கே நன்றி சொல்ல வேண்டும். அவர் மட்டும் பழிவாங்குபவராக இருந்திருந்தால், நான் எங்கே அலைந்து கொண்டிருப்பேனோ என்று கல்லூரி நண்பர்கூறியபோது, இருவர் கண்களிலும் கண்ணிர் துளிர்த்தது. 'உதவிவரைத்து அன்றுஉதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'. எனும் குறள் என் நினைவிற்கு வந்தது. எத்தனை தோள்களைக் கொடுத்தாலும் தமிழ்ச் சமுதாயம் மீண்டும் மீண்டும் கீழே வீழ்வதற்கும், அதே நேரத்தில் கன்னடியரும், தெலுங்கரும், பிறரும் ஒரு கை கொடுத்தாலே அதைக்கொண்டு அவர்கள் முன்னேறி விடுவதற்கும் காரணம் புரியாமல் இருந்த எனக்கு, அப்போதே தெளிவு ஏற்பட்டது. நன்றியுணர்வு என்னும் சால்பினைப் பெற்றவர்களை நிறையக் கொண்ட சமுதாயத்தில், உதவுவோரும் பெருகுவார்கள். ஒருவர் இல்லாத நேரம் மற்றொருவர் முன்வந்து உதவுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/412&oldid=787284" இலிருந்து மீள்விக்கப்பட்டது