பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 373 என்னைப் பொறுத்தமட்டில், முழுக்க முழுக்க கதர் அணிவதோடு, என் நாட்டுப்பற்றைக் கட்டுப்படுத்தினேன். பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம் என்னும் பெயரில் ஒர் அமைப்பு இலண்டனில் பல்லாண்டுகளாக இயங்கிவருகிறது. அது திங்கள்தோறும் ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுகிறது. என் கல்லூரிப் பருவத்தில் இரண்டொரு ஆண்டுகள் அதற்குப் பணம் கட்டி, வாங்கிப் படித்தேன். அதில் ஆனுடைய மாலை என்னும் சிறுகதை வெளியாயிற்று. ஆன் என்னும் மாது தன்னிடமுள்ள முத்துமாலை தன் மூதாதையருக்குப் பன்னெடுங்காலமாக உரியது என்றும், அதைப் போன்ற சிறந்தது ஒன்று இப்போது கிடைக்காதென்றும் அதன் விலையை மதிப்பிடவே முடியாதென்றும் நம்பி வந்தாள். அதைப்பற்றி அய்யப்பாடு கிளம்பினாலே அவள் மனம் நோகும்; பதறுவாள்; கண்ணிர் வடிப்பாள். ஒருநாள் முத்து வணிகர் ஒருவரே ஆனுக்கு அறிமுகமாகிறார். அவர், ஆனின் குடும்பத்தினரின் மாலையைக் கண்டதும் அது செயற்கை முத்து. மட்டமானது. அண்மைக் காலத்தது என்று எளிதில் புலப்படுத்துகிறார். ஆனுக்கு அதிர்ச்சி; மயக்கம்: பிறகு தெளிவு. இப்படி முடியும் அக்கதையை அன்னத்தின் முத்துமாலை' என்னும் பெயரில் தமிழாக்கம் செய்திருந்தேன். இந்தச் சிறுகதை 'பாரதி'யில் வெளியானதாக நினைவு. தமிழ் அன்பர்கள் மாநாடு 'பாரதி மற்றோர் நினைவை எழுப்புகிறது. 1933 ஆம் ஆண்டு சென்னையில் அப்போதைய சீனக் கடைத்தெருவில், பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில், தமிழ் அன்பர்கள் மாநாடு நடந்தது. சென்னையில் கொடி கட்டிப் பறந்த திரு கே.வி. கிருஷ்ணசாமி அய்யர், டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன், பி.என். அப்புசாமி அய்யர் முதலியோர் இம்மாநாட்டைக் கூட்டினார்கள். அப்போதைய கல்வி அமைச்சர், திரு சு. குமாரசாமி ரெட்டியாரைப் பங்குகொள்ள அழைத்தார்கள். இப்பெரியவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. 'தமிழ் அன்பர்களாகக் கூறிக் கொள்ளவே உடன்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/415&oldid=787289" இலிருந்து மீள்விக்கப்பட்டது