பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. வேலையோ வேலை ஐ.சி.எஸ். படிக்கும் முயற்சிக்கு ஆபத்து நினைத்தது ஒன்று; நடந்தது வேறு ஒன்று! என் தந்தையும் நானும் நினைத்தது, பொருளியல் சிறப்புப் பாடம் எடுத்தால், இங்கிலாந்துக்குச் சென்று, ஐ.சி.எஸ். தேர்வு எழுதலாம் என்று. அப்படி நினைத்தபோது எங்கள் குடும்பத்துக்கு இருந்த பொருளியல் நிலை வேறு. அதற்கான படிப்பை முடிக்கும்போது நிலவிய சூழல் வேறு. 1930ஆம் ஆண்டில், என்னைச் சீமைக்கு அனுப்பிவைக்கலாமென்று என் தந்தை இசைந்தபோது, நெல்லின் விலை பயிர் இடுவோருக்கு ஆதாயமாக இருந்தது. உழுதவன் கணக்குப் பார்த்தால், தாராளமாகக் கையிருப்பு இருக்கும் வகையில் விலைவாசி இருந்தது. எனக்குத் தமக்கையோ தங்கையோ இல்லாமையால் திருமணச் செலவு சுமையும் இல்லை. அதோடு, என் தந்தை, அக்கம்பக்கங்களில் நடைபெறும் நீர்ப்பாசன வேலைகள், சாலைப் பணிகள், பாலங்கள் ஆகியவற்றில் ஒப்பந்தப் பணி செய்து வந்தார். அவையும் ஆண்டுக்குச் சில ஆயிரம் ரூபாய்களைத் தேடித் தந்தன. இப்பணியில் மேலும் வளர . முடியுமென்று என் தந்தை நம்பினார். எனவே, இங்கிலாந்து சென்று படிக்க வேண்டுமென்னும் என் விருப்பம், அவர் விருப்பமாகவும் மாறிற்று. ஆனால், புறநிலைகள் வேறு போக்கில் வளர்ந்தன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுக்குப் பின், உலகமுழுவதிலும் பொருளாதார நெருக்கடி கருக்கொண்டு பெரிதாக உருவாகி, பல நாடுகளை அலைக்கழித்தது. அது இந்தியாவையும தாக்கியது. இங்கேயும் பொருளியல் நலிவு பரவலாக ஏற்பட்டது. விலைவாசிகள் மளமளவென்று சரிந்தன. அப்போது நெல்லைப் படிக் கணக்கில் விற்பது வழக்கம். நெருக்கடிக்கு முன்பு ஐந்நூறு படிக்கு அய்ம்பது, அறுபது ரூபாய் விலை. பின்னர், அதே அளவு நெல்லை முப்பது ரூபாய்க்கும் வாங்குவாரில்லை என்று ஆகிவிட்டது. = நெல் வணிகரிடம் நெல்லை அளந்துவிட்டு, பல திங்கள் காத்துக்கிடந்து, சிறிது சிறிதாகப் பணத்தைப் பெறவேண்டிய அவல நிலை உருவாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/426&oldid=787314" இலிருந்து மீள்விக்கப்பட்டது