பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு - 387 ஆறுதல் அடைந்தார். ஆனால் பகைச்சூழல் சில ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த நிலையில் என்னைச் சீமைக்கு அனுப்பிப் படிக்க வைப்பதைக் கைவிட நேர்ந்தது. உள்நாட்டிலே, வேலைதேடுவோம் என்று நானும் தந்தையும் எங்களை நாங்களே தேற்றிக் கொண்டோம். உறவினரின் எதிர்ப்பு என் கதையைத் தொடர்வதற்குமுன், இவ்விடத்தில் ஒர் நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். நான், பொறியியற் கல்லூரியில் சேராமல், சிறப்புப் பாடம் படிக்கத் திட்டமிட்டபோது, என் நெருங்கிய உறவினர் ஒருவர் மூத்தவர் என்னிடம் அதைப்பற்றி வாதம் புரிந்தார். நான் இங்கிலாந்து சென்று படிப்பதை அவருடைய வைதீக உள்ளம் ஏற்கவில்லை. அதை அவர் ஒளிக்கவில்லை. என்னிடம் சொல்லி, என் மனத்தை மாற்ற முயன்றார். நான் இசையவில்லை. அதனால் அவர் மனம் புண்பட்டது போலும்! அவர், அதுமுதல் என்னோடு பேசுவதை நிறுத்திக் கொண்டார். மூன்றாண்டுகளுக்குமேல் ஓடின. கடைசியில் நான் வெளிநாடு போய்ப் படிக்கப் போவதில்லை என்பதைப் பிறர் வழியாகக் கேள்விப்பட்டபோது, அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். சினத்தைவிட்டு, என்னைத் தேடி வந்து, தம்முடைய மகிழ்ச்சியைக் கொட்டினார். கடல்கடந்து செல்லுவதும் ஆங்கிலேயர் சமைத்ததை உண்பதும் பெருங்குற்றங்களாக, அந்த உறவினர்கண்ணுக்குப் பட்டன. அவற்றைச் செய்யப் போகிறேன் என்று கருதி மூன்று ஆண்டு பேசாத அளவு வெகுண்டார். இதுவே அன்றைய தமிழ் உலகம்! வேலை தேடும் படலம் சுழன்று சுழன்று அடிக்கும் சூறாவளியில் நெடுந்துாரம் பயனஞ் செய்ய வேண்டிய நெருக்கடி வெடித்தால் எப்படியிருக்கும்? அத்தகைய நெருக்கடியில், நானும் என் தலைமுறையினரும் படிப்பை முடித்துவிட்டு, பட்டங்களைப் பெற்றுக்கொண்டு வேலை கொடுக்கும் உலகில் காலடி வைத்தோம். இங்கும் அங்கும் அலைந்தோம். இவரையும் அவரையும் தேடிச்சென்று, கண்டு அலுத்தோம். வேலையோ கானல் நீராக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/429&oldid=787319" இலிருந்து மீள்விக்கப்பட்டது