பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 393 'உங்கப் பக்கத்து இளைஞனுக்கு நீங்கள்தான் முன் வந்து உதவவேண்டும். அது முடியாவிட்டால் அவன் தன்னம்பிக்கையை சிதைக்க வேண்டாம். அவனுக்கு வயது இருபத்தொன்றுதான். 'ஆகவே, துணிந்து பெரிய பதவிகளையே நினைத்து முயலட்டும். நம்மவர்களுக்குப் பெரியதையே நினையுங்கள்; செய்யுங்கள்' என்று அமைதியாக, இனிய குரலில் சிவசங்கரர் சொல்லவும், பெரியவர் திரும்பி வேகமாக நடக்கத் தொடங்கினார். வந்தவர் யாரென்று எப்படிக் கேட்பதென்று தயங்கினேன். அப்பெரியவர் பல அடிபோகும் வரையில் காத்திருந்த மிட்டாதார் சிவசங்கரர், புன்முறுவலுடன் என்னைப் பார்த்து, 'அவர்தான், சூணாம்பேடு ஜமீன்தார், அருணாசல முதலியார். அவர் இயல்பு அப்படிப் பேசுவது. அவர் சொன்னதைப் பற்றி மனம் புண்படாதே' என்று தேற்றினார். தமிழ்நாட்டின் அரசியலில் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக அடிக்கடி தலையிட்டு, நிறையப் பணத்தைச் செலவிட்டு, குழப்பங்களை, குழுக்களை, கவிழ்ப்புகளை உருவாக்கிய இந்த ஜமீன்தாரை முதன் முறை சந்தித்தபோது, 'செல்வம் சொல்லுக்கு அஞ்சாது' என்னும் உண்மையை உணர்ந்தேன். எரிச்சல் ஊட்டும் வகையில் பேசிய அவரே, பின்னர் எளிதாக உதவியதை உரிய இடத்தில் காட்டுகிறேன். திருமலையில் நடந்த தொரைபதியின் திருமணம் வேலைக்காக ஏங்கிக் கிடந்த பருவத்தில், மற்றோர் திருமணத்திற்கும் செல்லும்படி நேர்ந்தது. சிறப்பு வகுப்பில் என்னுடன் படித்தவர் திரு க.ப. தொரைபதி என்பவர். அவருடைய தந்தை புகழ்பெற்ற மாவட்ட நீதிபதியாக இருந்தார். அவர் சித்துரில் பதவியில் இருந்தபோது நான் அந்நகரத்திற்குச் சென்று அவர்களோடு தங்கியிருந்தேன். நண்பர் தொரைபதியும், அவரது தந்தை திரு. சி. பக்தவத்சலமும், தொரைபதியின் தம்பிகளும் என்னிடம் பழகிய அளவு நெருக்கத்தோடு வேறு எவரும் பழகியதில்லை என்பது மிகையல்ல. திரு தொரைபதி, இளமையிலேயே தாயை இழந்துவிட்டார். எனவே அவர் வீட்டைக் கவனித்துக் கொள்வது நாயர் சமையற்காரரின் பொறுப்பிலிருந்தது. அவரைப் போன்ற பொறுப்பும் பணிவும் பாசமும் உடைய ஒரு *மையற்காரரையும் நான் கண்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/435&oldid=787333" இலிருந்து மீள்விக்கப்பட்டது