பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நினைவு அலைகள் அவர்களோடு தங்கியிருந்தபோது, நாள்தோறும் சித்துாரின் மரம் செறிந்த நெடுஞ்சாலைகளில் நடந்து மகிழ்ந்தோம். எத்தனை எத்தனையோ மனக்கோட்டைகள் கட்டிமகிழ்ந்தோம். திரு தொரைபதி பின்னர், சட்டக்கல்லூரியில் படித்து, பி.எல். பட்டம் பெற்றார். வழக்கறிஞராகப் பதிந்துகொண்ட பிறகு, பல்லாண்டு பொறுக்காமல், உடனடி வந்த சிறிய ஏணிப்படியில் காலெடுத்து வைத்துவிட்டார். பூவிருந்தவல்லியில், மாதச் சம்பளத்தில் உதவி பப்ளிக் பிராசிக்யூடராகச் சேர்ந்தார். படிப்படியாக உயர்வதற்கு நெடுங்காலமாயிற்று. திரு தொரைபதி யின் நல்ல குணத்திற்கும் நேர்மைக்கும் உழைப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் அவர் நீதித்துறையின் பெரும் பதவிகளுக்கு உயர முடியாமற் போனதைப் பற்றி எண்ணும்போது என் உள்ளம் கலங்கும். அந்த இனிய நண்பர் தொரைபதியின் திருமணம் திருமலையில் நடந்தது. அத்திருமணத்திற்கும் போய் வருமாறு என்தந்தை பணித்தார். அவ்விதமே, சித்துர் சென்று, மாப்பிள்ளை வீட்டாரோடு திருமலைக்குச் சென்றேன். திருப்பதி இரயில் நிலையத்தில் நள்ளிரவுபோல் இறங்கினோம். அப்போது நல்ல நிலா வெளிச்சம் இருந்தது. திருமலை ஏறுவதற்கு தோலிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். - அக்காலத்தில் திருமலைக்குப் போக, சாலையோ பேருந்தோ கிடையாது. இரு ஆள்கள் தோள்களின் மேல் சுமந்து செல்லும் தோலி மட்டுமே இருந்தது. பலமான கொம்பில் தொட்டிலைக் கட்டி முன்னே ஒருவரும், பின்னே ஒருவருமிருந்து சுமந்து செல்வது தோலி. பொருட்களோ, நெடுந்துாரம் நடக்க முடியாத ஆள்ளோ மலையேற ஒரே வழி தோலிதான். நானும் இரண்டொரு இளைஞர்களும் ஆள்களுக்குச் சுமையாகச் செய்வதை விரும்பவில்லை; நடந்தே மலையேறினோம்; வழியில், இரண்டொரு முறை, தோலிகள் வருவதைச் சரிபார்க்க, சில மணித்துளிகள் நின்றோம் அவ்வளவே! திருமலையை அடைந்ததும் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சத்திரத்திற்குள் நுழைந்து படுத்தோம்; மரக்கட்டைகள் போல் உறங்கினோம். பொழுது விடியும் வேளை - திருமண வேளை நெருங்கியபோது எங்களை உலுக்கி எழுப்பி, திருமணத்தைக் காண வைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/436&oldid=787334" இலிருந்து மீள்விக்கப்பட்டது