பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 397 திரு துரைசாமி சென்னைக்கு வந்து, என்னை அழைத்துக் கொண்டுபோய் திரு மாணிக்கவேலரிடம் நேரில் அறிமுகப்படுத்தி விட்டு, அவர் உதவியை நாடினார். திரு மாணிக்கவேலர் மரியாதையோடு வரவேற்றார். இனிமையாகப் பேசினார். விசாரித்து, ஆவன செய்வதாகக் கூறினார். ஐந்தாறு முறை, துரைசாமி எனக்காகச் சென்னைக்கு வந்தார்; மாணிக்கவேலரிடம் சென்றார்; உதவியைக் கோரினார். பேச்சிலே இனிமையிருந்தது; பயன் ஏதும் இல்லை. திரு துரைசாமியின் ஆணைப்படி, நானாகவே சிலமுறை திரு மாணிக்கவேலரை அணுகிக் கோரினேன். எனக்கு எதுவும் எட்டவில்லை. வட்டிக் கடையில் வருவாய் மிகுதி ஒராண்டு காலம்போல, இதற்கு முயன்ற பிறகு, திரு துரைசாமி சலிப்படைந்தார். ஒரு முறை, எனக்குப் புதுவழி ஒன்றைக் கூறினார். “எதற்காக நீ, இப்படியெல்லாம் அலையனும்? இந்த வேலைக்குச் சம்பளமோ, மாதம் ரூபா நூற்றுஅய்ம்பதே! 'பேசாமல் நான் கொடுக்க இருக்கிற பணத்தை வைத்துக்கொண்டு என்னைப்போல் வட்டிக்கடை நடத்தினால், மற்றவர்கள்தான் உன்னிடம் வந்து நிற்பார்கள். வருவாயும் இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கும். அப்புறம் உன் விருப்பம்' என்றார். அன்று பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருந்த அவர் என் பொருட்டுப் பலமுறை சென்னைக்கு வரவும், உதவிகோரிப் போகவும் உடன்பட்டது பெரிய செயலாகும். அவருக்குச் சலிப்பு ஏற்பட்டது இயற்கை. அவர் உள்ளுர நினைத்துக்கொண்டிருப்பதும் எனக்குத் தெரியும். அதற்கு என் புரட்சி உள்ளம் ஒப்பாது என்பதும் அவருக்குத் தெரியும். அந்நிலையில் நான் எப்படிச் சலிப்படைந்து வேலை தேடுவதை விட்டுவிட முடியும்? திரு மாணிக்கவேலர் வழியாக, மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரி வேலைக்கு முயன்று கொண்டிருக்கையில், மற்றொரு பெரியவர் வழியாகவும் முயற்சித்தேன். அமைச்சர் பி.டி. இராசன் திரு பி.டி. இராசன், அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர். அவருடைய மைத்துனர் திரு சீனிவாசன் எனக்கு மிக நெருக்கமான நண்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/440&oldid=787339" இலிருந்து மீள்விக்கப்பட்டது