பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39B நினைவு அலைகள் முன்னர் திரு மீ. பக்தவத்சலம் வீட்டில் தங்கியிருந்த அந்த நண்பர் திரு பி.டி. இராசன் அமைச்சரான பிறகு அவரோடு அவர் வீட்டிலேயே, தங்கிப் படித்துக்கொண்டு இருந்தார். அவரைப் பார்க்க விடுமுறை நாள்களில் அமைச்சர் இல்லம் சென்று வருவேன்; புகழ்பெற்ற அக்குடும்பத்தின் விருந்தோம்பலைப் பெற்று மகிழ்வேன். இச்செலவு வளர்ந்தது; பல நாள்கள் அமைச்சரில்லத்தில் செலவிட நேர்ந்தது. இடுப்புப்பிள்ளை முதல் அய்ந்து வயது தம்பி வரை என்னைத் தேடி ஒடிவரும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டேன். அக்குடும்பத்தில் ஒருவனைப்போல் என்னையும் நடத்தினார்கள். மிக நெருக்கமாகிவிட்ட எனக்கு திரு பி.டி. இராசனிடம் வேலை கேட்க நா எழவில்லை. அவர் மைத்துனர் சீனிவாசன் என்னை அழைத்துக்கொண்டு போனார். எனக்காகப் பேசினார். எப்படியும் எனக்கு உதவும்படி கோரினார். i. அமைச்சர் என்னிடம் சில தகவல்கள் கேட்டறிந்துகொண்டு உதவுவதாகச் சொன்னார். பொறுமையாக, மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். சில திங்களுக்குப் பிறகு, சில நியமனங்கள் வெளியாயின. அவற்றில் திரு. பொன்னம்பலம் என்பவர், தென்னாற்காடு மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். திரு பொன்னம்பலம் எனக்கு மூவாண்டு மூத்தவர். மூவாண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர். விக்டோரியா மாணவர் விடுதியில் அவர் இருந்தபோது எனக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். இவற்றிற்கு மேலாக, அவருடைய தந்தை, நாமக்கல் வழக்கறிஞர் திரு. வேங்கடபதி, தன்மான இயக்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்தார். அவர் முன்னின்று, நாமக்கல்லில் சிறப்பான சுயமரியாதை மாநாட்டை நடத்தி, சாதாரண மக்களை விழிப்படையச் செய்வதில்துணைநின்றார். எனவே, எனக்குப் பதவி கிடைக்காமையை மறந்து, நான் பற்றுக் கொண்டிருந்த இயக்கத்தின் முன்னோடி ஒருவரின் மகனுக்கு என் நண்பருக்கு - பதவி கிடைத்ததைப் பற்றிப் பூரித்தேன். எனக்கும் வாய்ப்பு வருமென்று எதிர்பார்த்து, அப்போதைக்கப் போது நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். கேரள வழக்கறிஞர் ஒருவர் பாலகிருஷ்ணன் என்னும் பெயரினர். அமைச்சர் பி. டி. இராசனின் இல்லத்தில் கூடாரமடித்தார்: நாள்கணக்கில் தங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/441&oldid=787340" இலிருந்து மீள்விக்கப்பட்டது