பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. வேலை இல்லாக் கொடுமை இலவுகாத்த கிளிபோல், செய்தித் தாள்களில் வேலைக்கு ஆள் தேடும் விளம்பரங்களை எதிர்பார்த்து ஏங்கினேன். செய்தித் தாள்களில் அத்தகைய விளம்பரமே தென்படவில்லை. கொடிது கொடிது வறுமை கொடிது. புத்தி தெரியாத சிறு வயதில் வறுமையின் வாட்டம் வளர்ச்சியைக் கெடுக்கும். வாலிபப் பருவத்தில் வழி அடைக்கும் வறுமை, சிந்தனையில் கொதிப்பை வளர்க்கும். மக்கள் அனைவருக்கும் வாழ உரிமையுண்டு. நாணயமாகத் தொழில் புரிந்து வாழ உரிமையுண்டு; அவ்வுரிமை நடைமுறைப் படுவதற்குத் தக்க சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது, சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பு ஆகும். ஒருவரை ஒருவர் அடித்துத் துன்புறுத்தாமல், பார்த்துக் கொள்வது அரசின் கடமை. அதற்காகச் சட்டதிட்டங்கள் ஏற்படுகின்றன. வெளிநாட்டுப் படையெடுப்புகளில் இருந்து நாட்டைக் காப்பதும் அரசின் கடமை. அதற்கு வேண்டிய படையை, படைக்கலன்களை, விழிப்பான நிலையில் வைத்திருப்பது அரசின் பொறுப்பு. சாலைகளை அமைத்தல் ஆட்சியின் வேலை. ஊர்க்காவல், குடிநீர் வசதி, விளக்கு வசதி, சுகாதாரச் சூழ்நிலை ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் அரசுக்கு மற்றோர் பொறுப்பும் உண்டு. வேலைச் சந்தைக்கு வரும் ஆள்களைக் கணக்கிட்டு, அவர்களுக்கு உரிய காலத்தில், வேலை வாய்ப்புகள் கிட்டும்படி பார்த்துக் கொள்வது, இக்கால நாகரிக அரசுகளின் தலையாய கடமையாகும். நான் வேலைச்சந்தைக்கு வந்தபோது, வெள்ளையன் நம் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். 'எருது நோய் காக்கைக்குத் தெரியாது' என்பது பழமொழி. ஆளப்படுவோரின் அவலம், ஆள்பவர்களுக்குத் தெரிவதில்லை. அந்த அலட்சியப்போக்கு, முப்பதுகளில், பல இந்திய இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மட்டுமல்லாது வன்முறை யாளர்களாகவும் மாற்றிவிட்டது. வேலை இன்மையை ஒழித்த சோவியத் நாடு எத்தனை இருட்டடிப்பு செய்தாலும் மேனாட்டுப் போக்குகள், குறிப்பாக இரஷிய மக்கள் போக்கும் திசையும், நம் நாட்டவர்களுக்கும் தெரிந்தது. தனியுடைமைக்கு மாற்றான பொது உடைமைச் சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இங்குள்ளவர்களுக்கு விழிப்பை ஊட்டியது. எழுச்சியை ஏற்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/443&oldid=787342" இலிருந்து மீள்விக்கப்பட்டது