பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. வேலையில் வகுப்புரிமை வேலைக்கு வகுப்புரிமை முறை வேண்டும் 'தம்பீ பெரிய படிப்பு படித்திருக்கிறாயாமே! உன் படிப்புக்கும் குணத்திற்கும் நல்ல வேலை கிடைக்கத்தான் போகிறது. எப்ப என்றுதான் தெரியவில்லை. எதற்கும் காலம் வரவேண்டாமா?' என்று என்னைப் பார்த்துப் பலர் ஆறுதல் கூறுவார்கள். எனக்கோ பச்சைப் புண்ணில் உப்புத் துவுவதுபோல் இருந்தது. பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன். தம் பீ கவலைப்படாதே! அரசு அலுவல்களை, வகுப்புவாரி அடிப்படையில், பங்கு போட்டு வைத்திருக்கிறார்கள். பார்ப்பன ரல்லாத இந்துக்கள் முறை வந்தாக வேண்டும். அப்போது உனக்கு வேலை கிட்டும்; சற்றுப் பொறுத்துக்கொள்; சம்பாதித்தால் தான் அடுத்த வேளை சாப்பாடு என்னும் நிலையில் நீ இல்லை. எனவே, கவலைப்படாதே" இப்படி ஒத்தடம் கொடுத்தவர்கள், படித்தவர்கள். வேலைகளே இல்லாதபோது, வகுப்பு உரிமை இருந்தாலும் ஒன்று, இல்லாவிட்டாலும் ஒன்றே. வேலைகள் காலியானால் அல்லது பெருகினால் அச்சமுதாயத்தில், அக்கால கட்டத்தில், வகுப்புரிமை ஆணைக்குப் பொருள் உண்டு. 'இருக்கிற வேலை காலியாகாது; புது வேலைகள் ஏற்படாது என்னும் பாலைச் சூழ்நிலையில், வகுப்பு உரிமை ஆணை ஏட்டுச் சுரைக்காயே! ஏட்டுச் சுரைக்காயை நம்பும் படி படித்தவர்கள் பலர் எனக்கு அறிவுரை கூறிய போதெல்லாம், எனக்கு அவர்கள் பேரில் வெகுளியைவிட, பரிதாபமே மேலிடும். உண்மையான சூழ்நிலையை மறந்து, என்றைக்கோ பயன்படலாமென்னும் கற்பனையின்பால், காகித ஆணையின் பால், இத்துணை நம்பிக்கை வைத்துள்ளார்களே என்று பரிதாபப்படுவேன். எவரையும் நேருக்குநேர் புண்படுத்தாத என் இயல்பு - அவர்களோடு பகையை வளர்த்துக்கொள்ளாத அளவு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. வகுப்புரிமை முறை வேண்டாம் என்று எவரும் எண்ணிவிட வேண்டாம். நம் நொண்டிச்சமுதாயத்திற்கு, இவ்வூன்றுகோல் தேவை: பல்லாண்டுகள் தேவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/447&oldid=787346" இலிருந்து மீள்விக்கப்பட்டது