பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 409 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைந்திலே தொடங்கிய பெரியார் ஈ.வெ.ராமசாமியின் தன்மான இயக்கம், எழு ஞாயிறாக உயர்ந்தது. சாதிப் பிடிப்புகளில் கீறல்கள் வீழ்ந்தன: பல சாதியாரும் ஒன்றாக இருந்து உண்ணும் முறை விரைந்து பரவிற்று. இவற்றோடு முடிந்ததா? இல்லை. கலப்பு மனங்கள் பெருகின; கலப்பு மணமே முற்போக்கு இளைஞர்களின் ஆடாத குறிக்கோளாயிற்று. இதற்கும் மேலாக, சமய நம்பிக்கை ஆட்டங் கண்டது. திதி, திவசம் செய்தல் நிற்கத் தொடங்கின. குடிக்கணக்கு எடுத்தபோது இலட்சக்கணக்கான தமிழர்கள் சாதி இல்லை, மதம்' இல்லை, என்று பதிந்து கொண்டார்கள். சுருங்கச்சொன்னால் முப்பது, நாற்பது ஆண்டுகளின் விளைவுகளை, ஒரு ஆறு ஆண்டுகளில் தன்மான இயக்கம் கண்டு எடுத்தது. தன்மான இயக்கத்தின் பாதிப்புகளின் ஆழத்தையும் தன்மையையும் தமிழர்களில் மிகப் பெரும்பாலோர் சரியாக உணரவில்லை. உணர்ந்த சிலரும் இருட்டடிப்புச் செய்தே அதை அழித்துவிடலாம் என்று கனவு கண்டார்கள். எனவே, ஆயிரக்கணக்கில் உணர்ச்சிப் பிழம்புகளாக, சமுதாயப் புரட்சிப் பிழம்புகளாகக் கூடிய, தன்மான இயக்கக் கூட்டங்கள், மாநாடுகளைப் பற்றித் தமிழ்நாட்டு நாளிதழ்களும் பிற இதழ்களும் நாலு வரிச் செய்திகளும் வெளியிடவில்லை. கறைச் சேற்றால் பகுத்தறிவுச்சுடரின் பேரொளியை உலகில் இருந்து மறைக்க முடியவில்லை. இங்கிலாந்திலிருந்து மாதந்தோறும் வெளியான பகுத்தறிவு இதழ் ஒன்று, இந்தியாவில் பகுத்தறிவு இயக்கம்' என்ற தலைப்பில், ஒர் சிறப்பான கட்டுரையை வெளியிட்டது. அதில், தென்னாட்டில், பெரியாரின் தன்மான இயக்கம் வளர்த்துள்ள பரவலான புரட்சிகரமான, பகுத்தறிவுச் சிந்தனையைப் பாராட்டி எழுதியிருந்தது. இதற்கிடையில் 1930 ஆம் ஆண்டு பெரியாரின் கருத்தில் முகிழ்த்த சமதர்ம உணர்வு, ஈரோடு இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் வெளியாயிற்று. 'சமதர்மப்பணியே, தன்மான இயக்கத்தின் எதிர்காலப் பணியாக இருக்கும் என்று திட்டவட்டமாகப் பெரியார் அறிவித்து விட்டார். எனவே அதற்குப் பிந்திய பகுத்தறிவு இயக்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் சமதர்மமும் சமத்துவத்தோடு கலந்து முழங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/452&oldid=787352" இலிருந்து மீள்விக்கப்பட்டது