பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 நினைவு அலைகள் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம்வரை, கலையரங்கம் முதல் பண்ணைகள் தொழிற்சாலைகள்வரை, மின் நிலையங்கள், நூலகங்கள் உட்படப் பலவற்றைக் கண்டு வந்தார். பெரியாருக்கு முன்பு 1927 இல் ஜவகர்லால் நேரு சோவியத் நாட்டைப் பார்த்து, அந்த நாட்டின் முன்னேற்றத்தை உணர்ந்து வியந்தார்; பரவசப்பட்டு எழுதினார். அடுத்து 1930 இல் ஒரு திங்கள்போல் சோவியத் ஒன்றியத்தில் பயணஞ் செய்த, வங்கக் கவிஞர், நோபல் பரிசு பெற்ற உலகப் புகழாளர், இரவீந்திரநாத் தாகூர், அந்நாட்டில் புதிய மனிதனும் புதிய நாகரிகமும் உருவாகி விட்டதைக் கண்டு உணர்ந்து பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்தார். தொடர் கட்டுரைகள் வழியாக, இந்தியர்களுக்கு, உலகத்தின் முதல் சமதர்ம, பாட்டாளி ஆட்சியின் சீரையும் சிறப்பையும் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினார். இவ்விருவரைவிட அதிகம் துருவிப் பார்த்த பெரியார் ஈ.வெ. ராமசாமியும் சோவியத் நண்பராகத் திரும்பினார். சமதர்மத்தைத் தமிழ்நாட்டில் விரைந்து கொண்டுவரும் துடிப்போடும் உறுதியோடும் தாயகம் திரும்பினார். பெரியாரின் உறுதியும் துடிப்பும் சும்மா இருக்குமா? இராது! விளைவு? கொந்தளிப்பு! 55. பொதுஉடைமையே என் குறிக்கோள் சுயமரியாதைச் சமதர்மக் கட்சி பெரியார் ஈ. வெ. ராமசாமியின் போர்முரசாகிய 'குடிஅரசு' சாதியொழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கட்டுரைகளோடு சமதர்மத்திற்கு ஆதரவான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. சோவியத் மக்களின் முன்னேற்றம் பற்றியும், சோவியத் நீதிமுறை பற்றியும், சோவியத் நாட்டின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் பற்றியும் 'குடிஅரசில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. சோவியத் நாட்டிலிருந்து திரும்பி வந்த சில வாரங்களில், பெரியார், ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். மூத்த பொதுஉடைமை வாதியான, சென்னைத் தோழர் மா. சிங்காரவேலர், பெரியாரின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/455&oldid=787355" இலிருந்து மீள்விக்கப்பட்டது