பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 441 உடனே பகல் உணவுக்கு அழைக்கப்பட்டோம். அவரோடு பகல் உணவு உண்டோம். பிறகு திரு. சண்முகத்தின் காரில் சென்னைக்குப் புறப்பட்டோம். திரு. வேங்கடசாமியையும் பார்த்துப் பேசிவிட்டு, தலைவரைப் பார்க்கலாம் என்று சண்முகம் முடிவு செய்தார். அப்படியே கீழ்ப்பாக்கம் அப்பா தோட்டத்தில் திரு கே. வேங்கடசாமியைக் கண்டோம். திரு சண்முகமே அவரிடம் எல்லாவற்றையும் எங்கள் முன் எடுத்துரைத்தார். திரு. வேங்கடசாமி தயங்கினார். தம்முடைய பரிந்துரையைப் பெற்றவரும் சாதாரணப் பட்டம் பெற்றவர்தான். சுந்தரவடிவேலுவின் தகுதி அவருக்கு இல்லை; எனினும் முந்தியவர் வேண்டியவர். அவரை விட்டுவிட்டால், நட்புக்குத் தீங்கு வரலாமென்று தயங்கினார். திரு சண்முகம் 'நன்றாகத் தேறிய நாட்டுப்புற இளைஞனுக்கு வாய்ப்புத் தராவிட்டால், அத்தகையோர் படிக்க வருவது குறைந்துவிடும். அதற்குக் காரணமாக நாம் இருக்கக்கூடாது' என்று இதமாகப் பேசினார். கடைசியில் திரு. வேங்கடசாமி தம் ஆளுக்கே கொடுக்கவேண்டுமென்று அடம் பிடிப்பதில்லை என்று ஒப்புக் கொண்டார். பின்னர் திரு சண்முகம் எங்களைத் தலைவர் முத்தய்யாவிடம் அழைத்துப் போனார். அவரைக் கண்டதும், 'இவ்வளவு நன்றாகத் தேர்ச்சி பெற்றவர் இந்தச் சிறிய வேலைக்கு வரமாட்டாரென்று நாம் நினைத்தது தவறாகிவிட்டது. இவரே அதிகத் தகுதியுடையவர். இவருக்கே வேலை கொடுங்கள், என் முந்திய பரிந்துரை கிடக்கட்டும். 'திரு. வேங்கடசாமி ஒருவருக்குப் பரிந்துரை செய்திருக்கிறாராம். இந்த இளைஞருக்கு வேலை கொடுப்பதாயிருந்தால், அவரும் தம் வேண்டுகோளை வற்புறுத்துவது இல்லை, என்று ஒப்புக் கொண்டார். அவருடைய ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் இங்கு வந்திருக்கிறேன். இனியும் தயக்கம் வேண்டாம். சுந்தரவடிவேலுவை நியமித்துவிடுங்கள் என்றார். அவ்வேளை, ஜமீன்தார் அருணாசலம் அப்பக்கம் வந்தார். தாம் திரு பக்தவத்சலம் அவர்களிடம் என்னைப் பற்றிப் பேசியதைக் கூறினார், 'பக்தவத்சலமே நல்ல பையன் என்று சொல்லுகிறார். அதனால் இவனுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டே பங்களாவிற்குள் போய்விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/484&oldid=787387" இலிருந்து மீள்விக்கப்பட்டது