பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 - நினைவு அலைகள் அந்த அலுவலகத்திற்கு எழுத்தர் ஒருவர் இருந்தார். அவர் மாலைப் பொழுது உலாவிவர, என்னை ஊருக்கு வெளியே சிறுகளத்துார் பக்கம் அழைத்துச் சென்றார். இருட்டும் வேளை, குன்றத்துர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு தெய்வ சிகாமணி (முதலியார்) வந்தார். அவர் வயதில் மூத்தவர்; செல்வந்தர். அவர் என்னோடு சிறிது நேரம் உரையாடினார். பிறகு வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். அப்போது, 'இரவு உங்களுக்குத் துணையாக எழுத்தர் அலுவலகத்திலேயே தங்குவார். நான் காலையில் வருகிறேன். 'இரவு உணவுக்கு மணஞ்சேரி முதலியார் வீட்டில் ஏற்பாடு செய்துள்ளேன். அவர் பரம்பரையாகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்; வழிவழி சைவர். தாங்களும் சைவர் என்று கேள்விப்பட்டேன். அதனால், அவர் வீட்டில் ஏற்பாடு செய்து உள்ளேன். கூச்சப்பட வேண்டாம். எழுத்தர் உங்களை அங்கு அழைத்துப் போவார்' என்று தெய்வசிகாமணி கூறினார். "நான் உணவைப் பொறுத்த மட்டிலுமே மரக்கறி என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறேன். ஆனால் எவர் வீட்டில் மரக்கறி உணவு கிடைத்தாலும் உண்பேன். தங்கள் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருக்கலாம்' என்றேன். 'அது எப்படிங்க அசைவர்களாகிய எங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடுவது, நாட்டுப்புறங்களுக்கு ஒத்துவராதுங்க. நாலு பேரையும் மதித்து நடப்பதே நல்லது இப்படிச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டார். அறுபது வயது மதிக்கத்தக்க அப்பெரியவரிடம் வாதாடுவது சரியல்ல, என்று சும்மா இருந்தேன். எதிர்பாராத சந்திப்பு இரவு எட்டு மணிக்கு, எழுத்தர் என்னை அழைத்துக்கொண்டு மணஞ்சேரி முதலியார் வீட்டிற்குப் போனார். வீடு பெரியது: திண்ணையின்மேல் அய்ம்பது வயதைத் தாண்டியவர்போல் தோற்றமளித்த, திரு. முத்துக்குமாரசாமி (முதலியார்) உட்கார்ந்திருந்தார். அவர் கனிவோடு என்னை வரவேற்றார். என்னைப் பற்றிக் கேட்டார். கலகலப்பாக, அமுத்தல் இன்றிக் கேட்டுக் கொண்டே போனார். குடும்பத்தில் அவர் மூத்தவர். திரு. கந்தசாமி, திரு. சிவபாதம் என்னும் இரு தம்பிகள் அவருக்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/493&oldid=787397" இலிருந்து மீள்விக்கப்பட்டது