பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 நினைவு அலைகள் இப்படி எனக்குத் தோன்றியது. அதே நேரத்தில் மற்றோர் அய்யப்பாடு. இப்போது என்னிடம் கொடுத்துள்ள விதிகளின்படி, ஊற்றுப்பேனா வாங்கும் செலவு ஏற்றுக் கொள்ளப்படாது. அதை என் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டாவிட்டால், நாளை மற்றொருவர் கிளறினால், நான் குற்றச்சாட்டுக்கும் பழிக்கும் ஆளாக நேரிடும். நிறையச் செலவுக் கணக்கு இருந்தால், அது கவனத்தில் வராமல் தவறிவிட்டது என்று பின்னர் விளக்கங் கூறலாம். அதற்கும் இடமில்லையே; எழுதியிருப்பதோ மூன்று செலவினங்கள் மட்டுமே. என்ன செய்வதென்று திகைத்தேன். தணிக்கைக் குறிப்பில், இதைச் சுட்டிக்காட்டி விடுவோம்: அதனுடன் அனுப்பும் கடிதத்தில், அப்போது இச்செலவு தடை செய்யப்படாததால், மேற்கொண்டு நடவடிக்கை வேண்டாம் என்று எழுதி அனுப்புவோம். இத்தகைய முடிவுக்கு வந்தேன். இதை மெதுவாக, ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தேன். பண்புமிக்க தலைவர் அவர் புன்னகை பூத்தார். 'அப்போதே நான் மறுத்தேன், அமைப்பாளர்தான், வற்புறுத்தினார். அவருக்கு ஒரு சொட்டு வரக்கூடாதுங்க. சுந்தரராம அய்யர் நாணயமானவருங்க. அந்தப் பணத்தை நான் வரவு வைத்துவிடுகிறேன். அப்போதாகிலும் தணிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடலாமா?' என்று கேட்டார். அதற்கு இசைந்தேன். அரசு, அரசு சார்ந்த அமைப்புகளில் இப்படித்தான் தொடக்கத்தில், போதிய சிந்தனை செலுத்தாமல், எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல், முழு உரிமையுண்டு என்று முரசு கொட்டுவார்கள். காலவோட்டத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதும் தவறல்ல. அவற்றை முன்னாளிட்டு செயல்படுத்த முயல்வதால் தேவையற்ற தொல்லைகளைப் பெருக்குகிறார்கள். முகலிவாக்கம் ஊராட்சி மன்றத் தணிக்கையோடு, இரு நாள் பயணம் முடிந்தது; உள்ளக்கொதிப்போடு தொடங்கிய பயணம், வம்புகளில் சிக்கிக் கொள்ளாது முடிந்தது; மனநிறைவோடு சென்னை திரும்பினேன். இரண்டொரு நாள்கள் தலைமை அலுவலகத்தில் தங்கினேன். தணிக்கை அறிக்கைகளுக்கு, கையெழுத்துப் படிகள் எடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/499&oldid=787403" இலிருந்து மீள்விக்கப்பட்டது