பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 நினைவு அலைகள் 'எனவே, சென்னை வழியாகவே பல நாள் பயணம் செய்ய வேண்டும். "அதைக் காட்டி, அலுவலகம் மாறிய பிறகும் சில திங்கள் சில இரவுகள் சென்னையிலேயே குடியிருக்க சலுகை கேள். அதை வாங்கித் தருகிறேன். இப்போதைக்கு அப்படிச்சமாளிப்போம். பின்னர் வளரும் சூழ்நிலைக் கேற்ப, என்ன செய்வது என்று மீண்டும் சிந்திப்போம். 'தொடர்ந்து இதே வேலையில் இராமல், உயர் பதவிகளுக்கு முயற்சி செய். நானும் என்னால் ஆனதைச் செய்கிறேன்' என்று வழிகாட்டினார். அதன்படி, திருப்பெரும்பூதுர் தேரடித் தெருவில், அலுவலகத்திற்காக ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டேன். அங்கே அலுவலகத்தை மாற்றிக் கொண்டேன். அதில் ஒர் அறைக்கு வாடகை கொடுத்துவிட்டு, அதை எனக்கென்று வைத்துக் கொண்டேன். உணவு? ஒட்டலில். அன்று அவ்வூரில் மரக்கறி உணவுச்சாலை ஒன்றே ஒன்று. அதில் கிடைத்த உணவோ மோசம். அரை வயிறு சாப்பிட்டு இளைப்பதைக் கண்ட இருவர், சில திங்கள் என் உதவிக்கு வந்தார்கள். ஒட்டலுக்குக் கொடுத்த பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் தம் வீட்டில் இருந்து அனுப்பிய உணவை உண்டு வந்தேன். அவர்கள் எவர்? திருப்பெரும்பூதுர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைமை எழுத்தராகப் பணிபுரிந்த திரு முத்துலிங்க முதலியார். அவர் வீட்டிலிருந்து உணவு அனுப்ப முடியாத சில திங்கள், அவ்வலுவலகத்தில் பணிபுரிந்த திரு. சின்னசாமி ரெட்டியார் உதவினார். இவ்விருவரும் உண்டி கொடுத்து, என்னைக் காத்தமைக்குக் கைம்மாறு பெறும் நிலைக்கு அவர்கள் ஆளாகவில்லை. அது, அவர்கள் நல்வாய்ப்பு. அவ்விருவர் குடும்பங்களுக்கும் என் நன்றியை இப்போது எழுதி நிறைவுகொள்வதோடு இச்செய்தி முடிகிறது. இருவரும் கைத்துய்மை உடைய அலுவலர்கள் என்பதைச் சுட்டுக்காட்டுவது என் கடமை. திங்களில் பத்து நாள், முன்பின் அறியாத சிற்றுார்களில் தங்கல்; பத்து நாள் திருப்பெரும்பூதுாரில் தங்கல்; மற்ற நாள் சென்னையில் தங்கல், இப்படிச் சில திங்கள் ஓடின. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/511&oldid=787420" இலிருந்து மீள்விக்கப்பட்டது