பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 நினைவு அலைகள் கூறியதுபோல், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லிவிட்டால், அவருடைய வேலைக்கே கேடு வரக்கூடும்' என்று கூறி, நான் அவரை அமைதிப்படுத்த முயன்றேன். 'வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கட்டும். அப்பொழுதாவது அவனுக்குப் புத்தி வருகிறதா என்று பார்ப்போம் என்று பொங்கினார். 'அரும்பாடுபட்டு அவருடைய மனத்திலுள்ள உண்மையான காரணத்தைக் கிளறிக் கண்டுபிடித்தேன். 'நீ திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்துவது பற்றி அவருக்குப் பெருங்குறை. வேலை கிடைத்த பிறகும் தட்டிக் கழிப்பதால் ஆத்திரம். நல்ல இடங்களிலிருந்து பெண் கொடுக்க முன்வந்துள்ளார்களாமே! 'அந்த மூன்று நான்கு இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆத்திரப்படுகிறார். 'நீங்களாவது புத்தி சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவ்விடங்களையும் என்னிடம் கூறியுள்ளார். அவை உங்களுக்கும் ஏற்கெனவே தெரிந்த இடங்களாமே' என்று கூறியபடியே, திரு நரசா ரெட்டியார் எனக்குப் பெண் கொடுக்க விரும்பியவர்கள் பெயர்களை வரிசையாகச் சொன்னார். 'மன்னிக்க வேண்டும். அவர்களில் எவரையும் நான் திருமணம் செய்து கொள்வதாக நினைப்பில்லை. வேறு எங்கே திருமணம் செய்து கொள்வது என்றும் சிந்திக்கவில்லை. 'எங்கள் அப்பா, உங்களிடம் முரட்டுத்தனமாக நடந்ததை மறந்துவிடுங்கள்' என்று அவரை வேண்டினேன். அவர் சிரித்தார். வெகுளி பொல்லாதது அன்று நான் ஒரு புதிய பாடத்தைக் கற்றேன். அப்பாடம் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயன்பட்டது. அது என்ன? வெகுளி பொல்லாதது; தமிழன் வெகுளி மிகமிகப் பொல்லாதது; அது எல்லாக் கேட்டையும் செய்யவல்லது. 'எதையும் செய்ய விரைவது; வரம்பு அறியாதது; பத்துக் காசுகளுக்காகத் தலையைக் கொய்ய முனைவது பெற்ற பிள்ளையைக் கூடப் பாழும் கிணற்றில் தள்ளும் கொடிய தன்மையது. 'எவ்வளவு சிறிய குறைக்கும் எவ்வளவு பெரிய தீங்கையும் செய்ய உந்துவது. விளைவுகளின் அளவை அறியாது, பாய்வது இதை அன்று அறிந்தேன். என் தந்தையிலும் நல்ல தந்தை எவருக்கும் வாய்ப்பதரிது. என்னில் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தது அவரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/513&oldid=787422" இலிருந்து மீள்விக்கப்பட்டது