பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. என் முதல் பொதுக்கூட்டச் சொற்பொழிவு மீண்டும் காய்ச்சல் சிங்கல்பாடியில் காய்ச்சலில் வீழ்ந்த பிறகு, சில வாரங்கள் வரை, சாலைமேல் இருக்கும் ஊர்களுக்கு மட்டுமே சென்று வந்தேன். எப்போதும் அப்படியே செய்ய முடியுமா? அதுவும் பல சிற்றுரர்களுக்கு மண்சாலைகூட இல்லாத அக்காலத்தில்? எனவே நடைமிகுந்த இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ளநேர்ந்தது. புறப்படும்போது வெயில் இருந்தது. முதல் ஊரைப் போய்ச் சேருவதற்குள் மழை பிடித்துக் கொண்டது. எனவே, சேற்றிலும் தண்ணிரிலும் வயல்மேல் நடந்து சென்றேன். முதல் இரவு பேரிஞ்சம்பாக்கம் என்னும் சிற்றுரை அடைந்தேன். அதற்கு முன் இடைவேளை உண்டேன். ஆனால் இம்முறை அதிகம் நனைந்து விட்டேன். பேரிஞ்சம்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் உறங்க வேண்டியிருந்தது. இரவு பூராவும் கொட்டிய மழை, வீட்டிற்குள்ளும் வந்தது; கூரை வழியாக மூலையில் ஒழுகிற்று. முன்னர் பட்டறியாத துன்பத்தைத் தாங்கிக் கொண்டேன். ஊராட்சி வரவு செலவுக் கணக்கு சரியாக வைக்கப்பட்டு இருந்தது. அடுத்த நாள் அதைத் தணிக்கை செய்துவிட்டு, திருப்பெரும் பூதுருக்குத் திரும்பினேன். நெடுந்துரம் ஈர வரப்புகளின்மேல் நடந்துவர நேர்ந்தது. மழையோ கொட்டு கொட்டென்று தொடர்ந்து கொட்டிற்று. அன்றிரவு சிறிதுநேரம் மெய் மறந்து உறங்கினேன். நள்ளிரவுக்குப் பின் கடுமையான காய்ச்சல் கண்டது. கண்கள் நெருப்பாக எரிந்தன. பொழுது விடியுமட்டும் பொறுத்திருந்தேன். பொழுது புலரவும் பக்கத்து வீட்டுச் சின்னசாமி ரெட்டியார் காபி கொண்டு வந்தார். என்னைக் கண்டு திடுக்கிட்டார். என் உடம்பைத் தொட்டுப் பார்த்தார். "கொதிக்கிறதே என்று சொல்லிக் கொண்டே, உள்ளுர் மருத்துவரை அழைத்துவரப் பறந்து சென்றார். மருத்துவர், காலதாமதமின்றி வந்து சேர்ந்தார். உடம் பின் வெப்பத்தை அளந்தார். 104 டிகிரி இருந்தது. பிற சோதனைகளைச் செய்த பின், 'இவ்வேளைக்கு மருந்து கொடுக்கிறேன். காய்ச்சல் அதிகமாக இருப்பதால், சென்னை பொது மருத்துவமனையில் உடனே சேர்ந்து விடுவது நல்லது என்று ஆலோசனை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/520&oldid=787430" இலிருந்து மீள்விக்கப்பட்டது