பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 479 பணித்துறையைச் சேர்ந்த திரு. கோவிந்தசாமி, டாக்டர் நடேச முதலியாருக்கு வேண்டிய திரு. பக்கிரிசாமி ஆகியோரைக் காண்போம். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். உலக நிகழ்ச்சிகள் முதல், உள்ளுர்க் குழப்பங்கள் வரை எங்கள் பேச்சில் தீவிரமாக அடிபடும். சர்ச்சில், மகாத்துமா காந்தி முதல், உள்ளுர் அரசியல் தொண்டர் வரை ஆய்ந்து எடை போடுவோம். ஒவ்வொருவரும் உள்ளத்தில் பட்டதை ஒளிக்காமல் பேசுவோம். மாறுபட்ட கருத்துடையோர் புண்படுவது இல்லை. அத்தகைய பக்குவத்தை நாங்கள் பெற்றிருந்தோம். ஒரு முறை திரு. விசுவநாதன் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலில் இருந்து காஞ்சிபுரம் இட்லி வாங்கி வந்து கொடுத்து, எங்களைக் கெடுத்துவிட்டார். அதன் சுவையில் நாங்கள் தீராத பற்றுக்கொண்டு விட்டோம். அதன் விளைவு? திரு. விசுவநாதன் எத்தனை முறை சென்னைக்கு வந்தாலும் காஞ்சிபுரம் இட்லியோடு வர நேர்ந்தது. ஆண்டுக் கணக்கில் இப்படியே விருந்தோம்பினார். அச்செலவை அவர் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. திருமணப் பேச்சு நான் உடல் நலம் பெற்று, திருப்பெரும்பூதூருக்குத் திரும்பிய சில நாள்களில் அங்கு என்னைத் தேடி, ஒர் அரசியல் தியாகி வந்தார். உத்தமபாளையத்திலிருந்து, 'பாரதி மாத இதழை நடத்தி வந்த திரு. நாராயணசாமி தான் அவர். 1933இல் சென்னையில் நடந்த தமிழ் அன்பர் மாநாட்டில் பாரதி நாராயணசாமியைக் கண்டதைப்பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். அது முதல் அவர் என்னோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய தூண்டுதலால், நான் 'பாரதி'க்கு 'பாரதப் புதல்வனின் புலம்பல், ஜப்பானில் நவயுகம் போன்ற சில கட்டுரைகளையும் முதன்மையாளர் என்றதோர் சிறுகதையையும் எழுதி அனுப்பியிருந் தேன். அவை உரிய காலத்தில் பாரதியில் வெளியாயின. அவருக்கு, நான், சாதி உணர்வுகளைத் தலைமுழுகிவிட்ட மெய்யான சமத்துவ வாதி என்பது தெரியும். எனவே என்னிடம் திருமணம் பற்றிப் பேச வந்தார். தம்முடைய உறவினர் - செல்வர் - ஒருவருடைய பெண் பத்தாவது வரை படித்திருக்கிறாள். அப்பெண்ணின் பெற்றோர் முற்போக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/522&oldid=787432" இலிருந்து மீள்விக்கப்பட்டது