பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 நினைவு அலைகள் மாத்துார் கிருஷ்ணசாமி நாயுடு எனக்கு மிகவும் வேண்டியவர்; நல்ல பண்புடையவர். அவருடைய மகன், திரு. மா.கி. தசரதன், படித்துப் பட்டம் பெற்று, கல்லூரி முதல்வரானபோது, என் தம்பியொருவர் அந்நிலைக்கு வந்தது போன்ற மகிழ்ச்சியை அடைந்தேன். திரு. தசரதன், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வராக இருந்தபோது, நான் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தேன். அவர் என்னைக் கல்லூரி விழாவொன்றிற்கு அழைத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எதிர்பாராத வகையில் என்னை அதிர்ச்சியடையச் செய்தார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூல்கள் கொண்ட பேழையொன்றை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். என்னுள் வெகுளி பொங்கிற்று. தொடக்கப்பள்ளி ஆசிரியரைக்கூட, நாலு பேர்கள் முன்னிலையில் நான் கடிந்து கொண்டதில்லை; தனியாகவே கடிந்து கொண்டிருப்பேன். காரணம்? ஆசிரியர் மரியாதை இழந்தால், அப்புறம் அவருடைய திறமை செயல்படாது. என் கடிந்துரைக்கு ஆளானவர்கள் ஆய்வாளர்கள் மட்டுமே இருக்க முடியும். அதுவும் சரியென்று வாதிட மாட்டேன். அவர்களிடம் சுடு நெருப்பாக இருந்ததால்தான் அவர்களும் என்னை எவ்வலையிலும் சிக்க வைக்கவில்லை. நானும் அவர்களில் ஒரு வரையும் காவல்துறையின் புலனாய்வுக்கு விடவேண்டிய நிலைமை உருவாகவில்லை. அவர்களும் இதற்கும் அதற்கும் ஆசைப்பட்டு மாட்டிக் கொள்ளவில்லை. திரு. தசரதன் கொடுத்த சங்கத்தமிழ் இலக்கிய நூல்களைப் பேழை யோடு, சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கிவிட்டேன். பென்னலூர் இராமலிங்கர் ரெட்டியார், கண்ணன்தாங்கல் நாயுடு, குத்தம்பாக்கம் நாயுடு, காண்டுர் சடகோபாச்சாரியார், எடையார்பாக்கம் நாயுடு ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/531&oldid=787446" இலிருந்து மீள்விக்கப்பட்டது