பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 509 எனவே, நண்பர் திருநாவுக்கரசின் அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். தொடக்கத்திலிருந்தே பிராவிடெண்ட் நிதி கட்டத் தொடங்கினேன். அதில் சில நூறு ரூபாய்கள் சேர்ந்திருந்தன. அத்தொகையில் கடன் வாங்க இடம் இருந்தது. அது நினைவிற்கு வரவும் தெம்பு பெற்றேன். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் துணிந்து சேர்ந்தேன். சேமிப்புப் பணம் எனக்கு வழித்துணையாயிற்று. இப்போது, பல்லாண்டுகளுக்குப் பின்னர் பழையனவற்றை நினைத்துப் பார்க்கிறேன். நண்பர் திருநாவுக்கரசு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையானதை உணர்கிறேன். பதினைந்து ஆண்டுகள், பொதுக்கல்வி இயக்குநர், இந்திய அரசின் இணைக் கல்வி ஆலோசகர், தமிழ் நாட்டின் தலைமைக் கல்வி ஆலோசகர் ஆகிய பெரும் பதவிகளில் இருந்து விட்டு ஒய்வு பெறும்போது என் கையிலோ, வங்கியிலோ இருந்த மொத்தத் தொகை எவ்வளவு? சில நூறு ரூபாய்களுக்கும் குறைவு. ஆனால்? திருநாவுக்கரசின் வழியை, கல்வித்துறைக்கு வந்த பிறகும் விழிப்புடன் பின்பற்றியதால், இருவரே கொண்ட என் குடும்பம். காலந்தள்ளும் அளவு பிராவிடெண்ட் நிதி சேர்ந்திருக்கிறது. அடிக்கடி அவரை நினைப்பதுண்டு. எப்படி நினைக்கிறேன்? என்னைத் தடுத்தாட்கொண்டவராக. 73. இந்தியை எதிர்க்கவும் ஏற்கவும் தயங்கினேன் தமிழகத்தில் கொந்தளிப்பு 1938 ஆம் ஆண்டு ஜூன் கடைசி வாரம் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதே உலகப்புகழ் தத்துவ மேதையாக விளங்கிய டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், அதே பயிற்சிக் கல்லூரியில் படித்தவர் என்று தெரிந்துகொண்டேன். எவ்வளவு பெரியவர் படித்த இடத்தில் படிக்கிறோம் என்று பெருமிதங் கொண்டேன். வழக்கம் போல் நாள் தவறாமல், நேரந்தவறாமல் கல்லூரிக்குச் சென்று வந்தேன். வகுப்புகளில் இருக்கும்போது பாடங்களின் மேல்மட்டுமே மனம் ஒன்றி நிற்கும் பழக்கம் விட்டுப்போகவில்லை என்பதை உணர்ந்தேன். என் தன்னம்பிக்கை வளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/552&oldid=787490" இலிருந்து மீள்விக்கப்பட்டது