பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவு அலைகள் יפ1ם: பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் நுழையாத, திட்ட மொன்றைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அத்திட்டம் என்ன? சென்னை மாகாணத்தில் நடந்துகொண்டிருந்த பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக அறிவித்தார். எப்போதிருந்து? 1938 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல், எந்தெந்த வகுப்புகளுக்கு ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு . அவ்வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவியர் அனைவரும், இந்தி மொழியைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டும்; அதில் தேர்வு எழுத வேண்டும்; அத்தேர்வில் போதிய மதிப் பெண் பெற்றால்தான், ஆறிலிருந்து ஏழாம் வகுப்புக்கும், ஏழிலிருந்து எட்டாம் வகுப்புக்கும், எட்டிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்கும் போகலாம். இத்திட்டத்தை முதலில் நூறு உயர்நிலைப் பள்ளிகளில் வெள்ளோட்டம் பார்க்கப் போவதாக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்தபோது. நான் துணைப் பஞ்சாயத்து அலுவலராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். சிற்றுார் ஒன்றில், ஒரு பெரியவர் இது பற்றி என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவருக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது; படிப்பும் அதிகமில்லை. திண்ணைப் பள்ளியில், பழைய கால முறைப்படி படித்தவர்; பிறகு முயன்று, தாமே பலவும் கற்றவர்; ஆழ்ந்த கூர்த்த மதியினரும் கூட. அவர், செய்தித்தாளில் வந்த இந்தி கட்டாயப் பாட அறிவிப்பை என்னிடம் காட்டினார். காட்டிவிட்டு, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றார். மனிதர்களிடையே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதை வெறுப்பது போன்றே, மொழிகளிடையே தீண்டாமையைக் கடைப்பிடிப்பதையும் நான் வெறுத்தேன். இந்தியை விரும்பிக் கற்றுக்கொள்ள முயன்றேன். அது கைகூடாதது என்னுடைய குற்றம் அல்ல; அப்போது ஏற்பட்ட சூழ்நிலையின் கோளாறு. ஆகவே, இந்திப் பாடத்தை எதிர்க்கவும் மனம் வரவில்லை; ஏற்கவும் தயங்கினேன். 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைத்தேன். அதைக் கெட்டிக்காரத்தனமென்று நினைத்துக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/555&oldid=787494" இலிருந்து மீள்விக்கப்பட்டது