பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. உண்ணா நோன்பின் மதிப்பைக் காப்பாற்றினேன் ஸ்டாலின் ஜெகதீசன் உண்ணா நோன்பிருந்த ஸ்டாலின் ஜெகதீசன் எலும்பும் தோலுமாகிவிட்டார்; உயிர் ஊசலாடுகிறது என்ற நிலை தென்பட்ட போது அவரைத் தியாகராய நகரில் இருந்து இராயப்பேட்டைக்குக் கொண்டு போய்விட்டார்கள். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தெரு வொன்றில் தோழர் என். சிவராஜ் என்னும் வழக்குரைஞர் குடியிருந்தார். அவர் ஆதிதிராவிட சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவர். அவர் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து சிறப்பாகத் தொண்டு ஆற்றியுள்ளார். அவருடைய மனைவி திருமதி. மீனாம்பாள் சிவராஜ் கணவரைவிட அதிக சமுதாயத் தொண்டாற்றியவர். அம்மையார் தமிழில் சிறந்த பேச்சாளி. இருவருமே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்து பொதுத்தொண்டு ஆற்றியவர்கள். அந்த அம்மையார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, சென்னை மக்களைத் தட்டி எழுப்புவதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டார். திருமதி. மீனாம்பாள் சிவராஜ் வீட்டிற்கே தோழர் ஜெகதீசனை அழைத்துப் போனார்கள். அவர் அங்கிருப்பது, கானவருவோருக்கு உதவியாக இருக்குமென்று கருதப்பட்டது. செங்கற்பட்டு மாவட்ட ஆணைக்குழு அலுவலகத்தில் வேலை செய்த சில நண்பர்கள் தோழர் ஜெகதீசனை, இராயப்பேட்டைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்களிடமும் என்னைக் காண வேண்டுமென்னும் விருப்பத்தை, திரு. ஜெகதீசன் சொல்லியனுப்பினார். செய்தி கொண்டுவந்த நண்பர்களும் பரிந்துரைத்தார்கள். 'ஜெகதீசன் இறந்துவிட்டால், உன் வாழ்நாள் முழுவதும் அவரைப் போய்ப் பார்க்கவில்லையே என்பது உன் உள்ளத்தில் உறுத்தும் என்று சுட்டிக்காட்டினார்கள். உள்ளம் இளகிற்று. உண்ணாநோன்பியைச் சந்தித்தேன் அடுத்த நாள் திருமதி. சிவராஜ் வீட்டிற்குச் சென்றேன், வரிசையில் நின்றேன், நகர்ந்து நகர்ந்து ஜெகதீசன் இருந்த அறைக்குள் நுழைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/563&oldid=787510" இலிருந்து மீள்விக்கப்பட்டது