பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 நினைவு அலைகள் வேலைக்கு விண்ணப்பித்த என்னையும் இவ்வளவு மரியாதையோடு வரவேற்றது, புல்லரிக்கச் செய்தது. மற்றவர்களையும் அப்படியே வரவேற்றார் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். அப்படி மரியாதை செலுத்துவதை என் வாழ்க்கை நெறியாக உறுதிப்படுத்திக் கொண்டேன். நான் நாற்காலியில் அமர்ந்ததும், நற்பேறு இல்லாத கடைசி ஆளாக வந்திருக்கிறாய்' என்று இயக்குநர் சிரித்தபடியே சொன்னார். அதிலுள்ள குறும்பைப் புரிந்து கொண்டேன். முன்னர் அவர் மாநிலக்கல்லூரி முதல்வராக இருந்தபோது, என்னை ஆனர்ஸ் வகுப்பில் கடைசி மாணவனாகச் சேர்த்ததை நினைவு படுத்தினாரென்பது புலனாயிற்று. உடனே சற்றும் தயங்காமல், 'முன்பும் கடைசி இப்போதும் கடைசி. இருப்பினும் நற்பேறுக்குக் குறைவிராது" என்று பதிலளித்தேன். o 'எழுபத்தைந்து ரூபாய் ஊதியத்தையும் அய்ந்தாண்டுப் பணிக் கணக்கையும் இழந்துவிட்டு, புதிதாகச் சிறிய வேலைக்கு ஏன் வருகிறாய்?" என்று கேட்டார். 'செய்யும் பணியில் நிறைவு தேவை. இப்போதுள்ள பணி, உள்ளாட்சி அழுத்தங்களுக்கு ஆட்பட்டது. எனக்கு அரசியல் அலைகளுக்குத் தக்கபடி ஆடத் தெரியாது. கல்வித் துறைக்கு வந்துவிட்டால், அரசியல் அழுத்தங்கள் அதிகமிராது என்று எண்ணுகிறேன். எனக்குப் பணம் ஒன்று மட்டும் பெரிதாகத் தோன்றவில்லை' என்றேன். 'சரி கல்வித் துறையில் உனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகுக!” என்று வாழ்த்தி அனுப்பிவிட்டார். எதிர்பார்த்தபடி, தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலில் நான் இடம் பெற்றேன். அன்றைய சென்னை மாகாணக் கல்வித்துறை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. மதுரைப் பிரிவில் புதிய இளந்துணை ஆய்வாளர்கள் பட்டியலில் எனக்கு மூன்றாவது இடம். முதல் இடம் திரு. கோவிந்தராஜராவ் என்பவருக்கு. இரண்டாம் இடம் திரு. சங்கரன் பிள்ளைக்கு. மூன்றாவதாகத் தள்ளிவிட்டதைப் பற்றி அப்போது குறைபட்டுக்கொண்டேன். அதுவே பின்னர் நன்மையாக உருவாகப்போவது அன்று யாருக்கும் தெரியாது. ஒவ்வோர் நாளும் இளந்துணை ஆய்வாளர் நியமனத்தை எதிர்பார்த்தேன். முதல் இருவருக்கும் பட்டியல் வந்ததுமே வேலை கிடைத்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/581&oldid=787540" இலிருந்து மீள்விக்கப்பட்டது