பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 543 அவரும் திறமையாகவும் நேர்மையாகவும் சுணங்காமல் தொண்டாற்றி, என் அலுவலை எளிதாக்கினார். எங்குச் சென்றாலும் கீழ்நிலை ஊழியர்களின் இதயத்தில் எனக்கு எளிதாக இடம் கிடைத்து வந்தது. அப்பேறு, என் எல்லாப் பதவிகளிலும் கிட்டியது. அது, நினைக்க இனிக்கும் செய்தியல்லவா? ஒப்பற்ற ஒழலுர் பஞ்சாயத்து மதுராந்தகத்தில் அலுவல் பார்த்தபோது திரு. ஒ.வி. அளகேசன் ஊராகிய ஒழலூர் பஞ்சாயத்து என் மேற்பார்வையில் இருந்தது. அதன் தலைவர் யார்? திரு அளகேசனின் உறவினராகிய திரு. முத்துக்குமாரசாமி முதலியார் ஆவார். அரசியலில் இருவரும் வெவ்வேறு கட்சியினர். இருப்பினும் ஒரு வரை ஒருவர் மதித்து வாழ்ந்தார்கள். ஒழலூர் பஞ்சாயத்து சுறுசுறுப்பான பஞ்சாயத்துகளில் ஒன்று. அது சென்னை மாகாணத்திலேயே முதன்முதல் மேனிலைத் தொட்டி கட்டி, குடிதண்ணிர் வசதி செய்த ஊராட்சி ஆகும். ஒழலூரில் குளத்து நீரே குடி நீராகும். கிணற்று நீர் அருந்துவதற்கு ஏற்றதல்ல. எனவே, ஊரில் குளத்திற்கு வேலியிட்டுப் பாதுகாத்தனர். பொறியின் துணையால், குளத்து நீரை மேனிலைத் தொட்டிக்கு இறைத்து நிரப்பினர். அதிலிருந்து குழாய் அமைத்துக் குடிநீர் கொடுத்தனர். வீடு தோறும் குழாய் இல்லை; குளத்தங் கரையில்தான் குழாய். எல்லாச் சாதியாரும் அங்குச் சென்று, குடிநீர் பிடித்துக்கொண்டு போவார்கள். ஒழலூர் ஊராட்சி ஒன்றியக் கணக்குகளின் ஆண்டுத் தணிக்கைக்குச் சென்றேன். ஒரிரு நாள்களில் திரும்பிவிடலாமென்று எண்ணிச்சென்றேன். * இரவு பகலாகத் தணிக்கை செய்தும் மூன்றாம் நாள் இரவு நெடுநேரம் கழித்தே வேலை முடிந்தது. ஊரில் 'அப்பு நாட்டான் கிணறு என்ற பெயரில் ஒரு கிணறு இருந்தது. ஊரார் குளியல் முதலிய தேவைகளுக்கு அதையே நம்பி வாழ்ந்தார்கள். ஊராட்சி மன்றம், அதை ஆழப்படுத்த முடிவு செய்தது. உரியவர்களிடம் ஒப்புதல் பெற்றது. ஆழப்படுத்தியபோது பாறை குறுக்கிட்டது; வேலை நீண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/586&oldid=787545" இலிருந்து மீள்விக்கப்பட்டது