பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 நினைவு அலைகள் ஒப்பந்தக்காரரை நாடாமல், ஊராட்சி மன்றமே நேரடியாக வேலை வாங்கிற்று. ஒவ்வொரு நாள் செலவிற்கும் துல்லியமாக, விரிவாக இரசீதுகள் வாங்கி வைத்திருக்கக் கண்டேன். அந்த ஒரு வேலைக்கு மட்டும் ஆயிரத்து அய்நூறு பற்றுச் சீட்டுகள் போல் தணிக்கை செய்ய நேரிட்டது. ஊராட்சி மன்றம் வேறுசில பொதுப் பணிகளையும் செய்திருந்தது. அவற்றின் கணக்குகளையும் தணிக்கை செய்தேன். ஆண்டுத் தணிக்கை அறிக்கை என்ன காட்டிற்று? கிணறு தோண்டிய வகையில், திட்டமிட்ட தொகைக்கும் அதிகமாகச் செலவாகிவிட்டது. பிறவேலைகளில் திட்டத்தொகையில் அதிகம் மிச்சமாகியுள்ளது. ஒப்பந்தக்காரர்களிடம் விடாமல், ஊராட்சி மன்றமே நேரடியாக வேலை செய்யும்போது, திட்டத் தொகையில் பத்தில் ஒரு பங்கு பனமாவது மிச்சமாக வேண்டுமென்று அரசு விதிமுறைகள் கோடு காட்டின. ஒழலூரில் பல பணிகளில் அதற்கும் அதிகமாக மிச்சமாகியிருந்தது. ஒன்றில் எச்சமான செலவு நிலையையும் பிறவற்றில் அதிகம் மிச்சமான நிலையையும் படம் பிடித்துக்காட்டியது என் அறிக்கை. பொறுப்போடு நிதி செலவிடப்பட்டது என்று முடித்தேன். ஊராட்சித் தலைவரின் நேரடி, விழிப்பான கண்காணிப்பு இருந்த இடங்களில் எல்லாம் மிச்சநிலையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அன்று ஊராட்சித் தலைவர்களில் மிகப் பெரும்பாலோர் பொது நிதியில் கைவைக்கத் தேவையில்லாத செல்வர்களாக இருந்தார்கள். சில செல்வர், மேற்பார்வையினைத் தங்கள் ஊழியர்களிடம் விட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் போதிய விழிப்புக் காட்ட வில்லை. பொதுப் பணத்தை மிச்சப்படுத்துவதில் அக்கறையில்லை. இரகசியம் கூற மறுத்தேன் ஒழலுரில் திரு. அளகேசன் விருந்தாளியாக அவர் வீட்டிலேயே தங்கி இருந்தேன். மாவட்ட ஆட்சிக்குழுவின் துணைத்தலைவராக இருந்த அளகேசனிடம், பஞ்சாயத்துத்துறை இருந்தது. இருப்பினும் அவர் என்னை அரசின் ஊழியனாக நடத்தவில்லை; தோழனாகவே நடத்தினார். நானும் அவரிடம் உரிமை கொண்டாடவில்லை; அவருக்கு உரிய மதிப்பைக் கொடுக்கத் தவறியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/587&oldid=787546" இலிருந்து மீள்விக்கப்பட்டது