பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மாவட்டத் தலைவரின் மிரட்டல் அளகேசன் பரிந்துரை உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் பேரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் கொண்ட கோப்பு என் கைக்கு வந்து சேருவதற்கு முன்னரே, வதந்தி ஒன்று என் காதிற்கு எட்டிற்று. அது என்ன? மேற்படி குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணையை என்னிடம் ஒப்படைக்க உரியவர்கள் முடிவு செய்தவுடனேயே, திரு. ஆராவமுது அய்யங்காருக்கு அச்செய்தி எட்டிற்றாம். அவர் தமக்கு மிகவும் நெருக்கமான மாவட்ட ஆட்சிக்குழுவின் துணைத்தலைவரான திரு. அளகேசனை அணுகினாராம். தமக்கு ஆதரவாக என்னிடம் பரிந்துரைக்கும்படி அளகேசனிடம் வேண்டினாராம். அது பலிக்கவில்லையாம். பரிந்துரைப்பதற்குப் பதில், ஆலோசனை கூறி அனுப்பி விட்டாராம். என்ன ஆலோசனை? சுந்தரவடிவேலு நடுநிலைமையாளர் இரு தரப்பையும் பொறுமை யாகக் கேட்கும் இயல்பினர். விருப்பு வெறுப்புக்கு ஆள்படாமல், எவருடைய தயவிற்காகவோ, அச்சுறுத்தலுக்காகவோ நெறி பிறழாமல் நீதி வழங்கக்கூடியவர். எனவே, எவருடைய பரிந்துரையையும் தேடி அலையாதீர்கள். நீங்களேஅவரைப் போய்ப் பாருங்கள். உங்கள் நிலையை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லுங்கள். 'மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டிருந்தாலும் பொறுமையாகக் கேட்பார்; மனச்சான்றின்படியே நியாயமாக முடிவு செய்வார். இப்படித் திரு. அளகேசன், திரு. ஆராவமுது அய்யங்காருக்கு வழி காட்டி, அனுப்பி வைத்தாராம். இம்மாதிரிப் பல இடங்களிலும் பேச்சு அடிப்பட்டது. அது மெய்யா? பொய்யா? அப்போதும் நான் கண்டுபிடிக்கவில்லை: பின்னரும் தெரிந்து கொள்ளவில்லை. வடகோடு உயர்ந்தாலென்ன? வான் பிறைக்குத் தென்கோடு சாய்ந்தால் என்ன? என்று எண்ணி இருந்தேன். விசாரணைக்குச் சென்றேன் குற்றச்சாட்டுகள் கொண்ட கோப்பை ஆதிமுதல் அந்தம்வரை படித்தேன். மீண்டும் படித்து, குற்றச்சாட்டுகள் பட்டியல்களை ஆயத்தம் செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/590&oldid=787550" இலிருந்து மீள்விக்கப்பட்டது