பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 நினைவு அலைகள் அந் நிலக்கிழாரின் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து ஊராட்சிக் கணக்கை இரு நாள்கள் தணிக்கை செய்தேன். கண்டது என்ன? எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்ததைக் கண்டேன். கணக்குகள் ஒழுங்காக இருந்தன. அதிலும் அதிகமான சிறப்புத் தென்பட்டது. பொதுநிதி சிக்கனமாகச் செலவு செய்யப்பட்டிருந்தது. பல பொது வேலைகளில், திட்ட மதிப்பீட்டிற்குக் குறைவாகவே செலவு ஆகியிருந்தது. ஊராட்சி நேரில் வேலைகளை நடத்தும்போது, நூற்றுக்குப் பத்து மிச்சமாக வேண்டுமென்பது எதிர்பார்ப்பு. மிச்சமோ, இருபது, இருபந்தைந்து என்று இருந்தது. பொது நிதியை அவ்வளவு அக்கறையோடும் சிக்கனத்தோடும் செலவு செய்ததைப் பற்றி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். அந்தத் தலைவர் பெயர் மறந்துவிட்டதே என்று வருந்தினேன். இதே நிலையைப் பற்பல ஊராட்சி மன்றங்களில் கண்டேன். ஆனால், ஒரு அக்கப்போர் வந்தது. அதைக் கவனிக்கும்படி மேலிடத்துக் குறிப்பும் வந்தது. அது எவ்வூர் நிர்வாகத்தைப் பற்றியது? திருக்கழுக்குன்றம் பேரூர் ஆட்சி நிர்வாகம் பற்றியது. அவ்வூராட்சியின் தலைவர், தமக்கு வேண்டியவர்களுக்கே வேலை கொடுக்கிறார்; தகுதி திறமை பற்றிக் கவலைப்படுவேதே இல்லை. அவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று கண்டறியும்படி, எனக்கு ஆணை வந்தது. அதையொட்டி, முன்அறிவிப்புக் கொடுத்து விட்டு, திருக்கழுக்குன்றம் சென்றேன். அவ் வூராட்சித் தலைவர் யார்? வாலாஜாபாத் இந்துமத பாடசாலை என்னும் சீரிய பள்ளியை நடத்தி வந்த வா.தி. மாசிலாமணி முதலியாரின் மூத்த அண்ணன் ஆவார். அவர் பெயர் திரு. பாலசுந்தர முதலியார் என்பதாகும். குற்றங்காணப் போன எனக்குப் புதிய வழிகாட்டல் ஒன்று கிடைத்தது. திரு. பாலசுந்தரனாரிடம் அவர் பதவிக் கால நியமனக் கோப்புகளைக் காட்டும்படி கோரினேன். அவற்றைக் காட்டும்படி அவர் எழுத்தருக்கு ஆணையிட்டார். எழுத்தர் காட்டிய ஒவ்வொரு கோப்பையும் துருவிப் பார்த்தேன். நியமனங்களில் குறை காண முடியவில்லை. அவருடைய நியமனங்களில் மிகப் பெரியது எழுத்தர் நியமனமே. அதற்கு அக்கால ஊதியம் ரூபாய் முப்பதே. வேறு படிகள் கிடையா. அவ்வேலைக்கு நான்கைந்து பேர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/599&oldid=787559" இலிருந்து மீள்விக்கப்பட்டது